”ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டம் குறித்து ஆராய சிறப்புக் குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பிக்க உள்ளது. குழு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 18ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் ”ஒரே நாடு ஒரே தேர்தல்” தொடர்பான மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மசோதா நிறைவேறினால் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் நாடு முழுவதுமுள்ள சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்தப்படும்.


நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் I.N.D.I.A கூட்டணியை அமைத்துள்ள நிலையில், 3வது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக சிறப்பு குழுவை அமைப்பது போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகள், நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடைபெறுமோ என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.


காங்கிரஸ் விமர்சனம்:


இந்த நடைமுறை தேர்தலுக்கான செலவுகளை மிச்சப்படுத்துவதோடு, சிறந்த மற்றும் நெறிப்படுத்தப்பட்ட நிர்வாகத்திற்கு உதவும். மேலும் தேர்தல்களை சிறப்பாக நடத்த உதவும் என்று பாஜக தரப்பில் கூறப்படுகிறது. இதனிடயே, முன்னாள் குடியரசு தலைவர் ஒருவரை அரசியல் கண்ணோட்டத்திற்காக இத்தகைய குழுவிற்கு கொண்டு வருவது முன்னெப்போதும் இல்லாதது" என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற தேர்தல்:


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A எனும் கூட்டணியை உருவாக்கியுள்ளனர். மறுமுனையில் பாஜக தலைமையிலான கூட்டணியும் தங்களது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை ஏற்கனவே குறித்துவிட்டுதான், அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இதனை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் விரைந்து செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், மத்திய அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன. பாஜக சார்பில் மோடியே மீண்டும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். ஆனால், எதிர்க்கட்சிகளின் சார்பில் தற்போது வரை பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான எந்த தகவலும் வெளியாகவில்லை.