இந்திய எல்லை பாதுகாப்பு படைகளில் ஒன்றாக இந்தோ-திபெத் போலீஸில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு முடித்தவர்கள் அடுத்த மாதம் (ஜூலை) 7 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.
இந்தோ-திபெத்
இந்திய பாதுகாப்பு படைகளில் ஒன்றாக இந்தோ-திபெத் போலீஸ் படை(ஐடிபிபி) உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இது செயல்பட்டு வருகிறது. பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆண், பெண்கள் என இருதரப்பினரும் விண்ணப்பிக்கலாம்.
ஹெட் கான்ஸ்டபிள் பணி
அதன் அடிப்படையில், இந்தோ திபெத் எல்லைப்படையில் ஹெட் கான்ஸ்டபிள், அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோகிராபர்) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த 2 பணிகளும் சேர்த்து மொத்தம் 286 காலியிடங்கள் உள்ளன. இதில் 248 இடங்கள் ஹெட் கான்ஸ்டபிள் பொறுப்புக்கும் (இதில் பெண்களுக்கு 23 இடங்கள்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஹெட் கான்ஸ்டபிள் பணிக்கு பிளஸ் 2 படிப்பை முடித்திருக்க வேண்டும். நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும். இந்த பணிக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.25,500 முதல் அதிகபட்சமாக ரூ.81,100 வரை கிடைக்கும்.
அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர்
மீதமுள்ள 38 இடங்கள் அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோகிராபர்) பொறுப்புக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்களுக்கு 2 இடங்கள் உள்ளன. இந்த பொறுப்புக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.29,200 முதல் அதிகபட்சம் ரூ.92,300 வரை ஊதியம் கிடைக்கும். இதுதவிர அகவிலைப்படி உள்ளிட்ட பிற சலுகைகள் உண்டு. இந்த பொறுப்புக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். அல்லது அதற்கு நிகரான படிப்பை படித்திருக்க வேண்டும். அதோடு நிமிடத்துக்கு 65 வார்த்தைகள் ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
இந்த பொறுப்புகளுக்க விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பத்தாரர்கள் 1.1.2022ம் தேதி அடிப்படையில் குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சம் 25 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இந்த பொறுப்புகளுக்கு விண்ணப்பத்தாரர்கள் உடல் தகுதி, ஸ்கில் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் வழியாக தேர்வு செய்யப்பட உள்ளனர். ஸ்கில் தேர்வு என்பது தட்டச்சு செய்வதை அடிப்படையாக கொண்டது.
விண்ணப்பிக்க கட்டணம் மற்றும் கடைசி தேதி
விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் https://recruitment.itbpolice.nic.in/ இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க அடுத்த மாதம் (ஜூலை) 7 ம் தேதி கடைசி நாளாகும்.