Changing Job: புதிய வேலைக்கு செல்லும் முன்பு நிதி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
வேலை மாறும் சமயம்:
மாத சம்பள வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு ஊழியருக்கும் இந்த மார்ச் - ஏப்ரல் மாதங்கள் என்பது மிக முக்கியமானதாகும். காரணம் பெரும்பாலான நிறுவனங்களில் இந்த நேரத்தில் தான், ஊழியர்களுக்கான பெர்ஃபாமன்ஸ் போன்ஸ் மற்றும் ஊதிய உயர்வு வழங்குவது போன்ற முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அப்படி தங்களுக்கு கிடைக்கும் சலுகைகளை பொறுத்து தான் ஊழியர்கள் அதே நிறுவனத்தில் தொடரலாமா, வேண்டாமா என்பதையே முடிவு செய்வர். ஒருவேளை நீங்கள் எதிர்பார்த்த போனஸ் மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கவில்லை என, வேலை மாற முடிவு செய்துவிட்டீர்களா? அல்லது தற்போது இருப்பதை விட சிறந்த அலுவலகத்தில் வாய்ப்பு கிடைத்ததால் வேலையை விடுகிறீர்களா? அப்படி என்றால், நீங்கள் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டியவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. உங்களின் நிதி நிலைமை என்ன?
வேலையை விட்டு விலகுவதற்கு முன் உங்கள் நிதி நிலையைக் கண்டறிந்து மதிப்பிடுவது மிக முக்கியமானதாகும். நோட்டீஸ் பிரியடில் முழு ஊதியம் கிடைக்காவிட்டால் சமாளிக்க முடியுமா என்பன போன்ற, நிதிச் சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சேமிப்புகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் உள்ள வைப்புத் தொகைகளை அறிந்து, அதற்கேற்றபடி திட்டமிடுதல் அவசியம்.
2. குடும்ப சூழல்:
வேலையை விட்டு விலகும் முடிவு உங்கள் குடும்பம் மற்றும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட சில பணிகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை ஆலோசியுங்கள். காப்பீட்டு திட்டத்திற்கான மாதாந்திர பிரீமியங்கள், கார் கடன்கள் அல்லது வேறு ஏதேனும் நிலுவையில் உள்ள கடன்களை செலுத்துவது குறித்து கவனத்தில் கொள்வது அவசியமாகும். வேலையை விட்டு விலகும் உங்களது முடிவு குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைப் பாதிக்காத வண்ணம் திட்டமிடுங்கள்.
3.புதிய வேலையின் தன்மை:
புதிய வேலை உங்களது வளர்ச்சிக்கு சாதகமானதாக இருக்கிறதா, உங்களின் திறமைக்கு ஏற்ப கூடுதல் ஊதியம் பரிந்துரைக்கப்படுகிறதா என்பதை கருத்தில் கொள்ளுங்கள். தற்போதுள்ள அலுவலகத்தில் உங்களுக்கு கிடைக்கும் சலுகைகளை விட அதிகப்படியான, தொழிலாளர் நலன் சார்ந்த திட்டங்கள் இருக்கின்றனவா என்பதை கேட்டறியுங்கள். தேர்ந்தெடுக்கும் புதிய வேலை துறை சார்ந்து தங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும் என்பதை உறுதி செய்தபிறகே அதனை கிளிக் செய்ய வேண்டும்.
4. தற்போதைய அலுவலக சூழல்:
நிறுவனத்தை விட்டு வெளியேறுவதற்கு முன், வெளியேறுவது சிறந்ததா அல்லது ஒரே வழியா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்வது நல்லது. போதுமான ஊதியம் வழங்கப்படாத சூழலில், சிறந்த சம்பளத்தை வழங்கும் வேலை வாய்ப்பு கையில் இருந்தால், தற்போதைய முதலாளியுடன் கூடுதல் ஊதியத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தலாம். தற்போதுள்ள அலுவலகத்தில் நண்பர்கள் சூழ இருக்கும் சிலரால், புதிய அலுவலகங்களில் உடனடியாக தங்களை முழுமையாக பொருத்திக் கொள்ள முடியாது. அது மோசமான அனுபவமாக மாறலாம். அதற்கேற்றபடி, மனதளவில் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
5. முறைப்படி வெளியேறுங்கள்:
மேற்சொன்னவற்றை நினைவில் கொண்டு, சரியான முறையில் அலுவலகத்தில் தெரிவித்து முறைப்படி வெளியேறுங்கள். அது உங்கள் PF கணக்கு போன்றவற்றில் சிக்கல் ஏற்படுவதை தவிர்க்கலாம். அதோடு, எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மீண்டும் அதே அலுவலகத்தை அணுகும் வகையில் சுமூகமான உறவை பேணவும் உதவும்.