தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நலனை கருத்திற்கொண்டு மூடியிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆலையை விற்கும் முடிவை அதன் உரிமையாளர் கைவிட வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 




தூத்துக்குடி ஓப்பந்தகாரர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் பரமசிவன் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,  “தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 25வருட காலமாக நாங்கள் தொழில் மேற்கொண்டு வருகிறோம். இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்ட பிறகு நாங்கள் மிகப்பெரும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இத்தொழிற்சாலையை நம்பி சுமார் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் மட்டுமல்லாது எங்களைப்போன்ற எண்ணற்ற தொழில் நிறுவனத்தினர் வாழ்வாதாரம் இழந்து இருக்கிறோம். இந்த நிறுவனம் எப்படியாவது தன் மீதுள்ள பிரச்சினைகளை எல்லாம் சட்டபோராட்டங்கள் மூலமாக தீர்த்து விரைவில் திறக்கப்பட்டு விடும் என்று நாங்கள் மிகுந்த நம்பிக்கையில் இருந்து வந்தோம். 




இப்படிப்பட்டச்சூழலில், இந்த நிறுவனம் கடந்த 10தினங்களுக்கு முன்பு தனது தொழிற்சாலையை விற்பனை செய்யப்போவதாக நாளிதழில் அறிவித்துள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அதோடு இந்த நிறுவனத்தின் இம்முடிவு எங்களை மிகுந்த மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது. ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நம்பியுள்ள நாங்கள் மட்டுமல்ல அனைத்து தொழிலாளர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதார நிலையை கருத்தில்கொண்டு ஆலை விற்பனை முடிவை ஸ்டெர்லைட் நிறுவனம் மறுபரிசீலனை செய்திடவேண்டும்” என்றார்.




“தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தால் எந்தவிதமான மாசுபாடுகளும் இல்லை. இந்த நிறுவனம் மூடப்பட்டு இருந்தபோதும் கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிரை பாதுகாத்திட 6மாத காலங்கள் சிறப்பாக ஆக்சிஜனை உற்பத்தி செய்து மருத்துவமனைகளுக்கு சேவை அடிப்படையில் இலவசமாக கொடுத்துள்ளதை அனைவரும் அறிவார்கள். இப்படி இருக்க, இந்த நிறுவனத்தால் மாசு ஏற்படுகிறதா? என்பதை தமிழக அரசு உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றை நியமித்து அதன்மூலமாக ஆய்வு செய்திடவேண்டும். தொழிற்சாலை இயக்கப்படும் காலத்தில் தொழிற்சாலையால் மாசுக்கள் எதுவும் ஏற்படுகிறதா? என்பதை இந்த திறன்வாய்ந்த நிபுணர்கள் குழு முழுமையாக ஆய்வு செய்து அந்த குழு தரும் அடிப்படையில் நிறுவனத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். 




தமிழகத்தை பொறுத்தவரை அரசு நிர்ணயம் செய்துள்ள அடிப்படையில் தொழிற்சாலைகளுக்கான உற்பத்தி குறியீட்டு இலக்கை குறிப்பிட்டபடி எட்டவேண்டுமெனில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை மீண்டும் செயல்படுவது மிகவும் அவசியமாகும். ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்பட்டதால் தென்தமிழகம் வேலைவாய்ப்பு இழப்புடன், மிகப்பெரும் பொருளாதார இழப்பினை சந்தித்துள்ளது. காப்பர் உற்பத்தியில் இந்த நிறுவனம் முதலிடத்தில் இருந்ததுடன் இங்கிருந்து உலக நாடுகளுக்கு காப்பர் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால், தற்போது உலக நாடுகளில் இருந்து அதனை இறக்குமதி செய்யும் துர்பாக்ய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மத்திய, மாநில அரசுகள் புரிந்துகொள்ளவேண்டும்.




எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்டெர்லைட் தொழிற்சாலை செயல்படுவதற்கு உரிய அனுமதி வழங்கிடவேண்டும். இந்த தொழிற்சாலை இயக்கப்படும் 6மாத காலத்தில் இதனால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை அரசு நியமிக்கும் நிபுணர்கள் குழு மூலமாக கண்டறிந்து அதன்பிறகு அந்த நிறுவனத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்திடலாம். ஸ்டெர்லைட் நிறுவனத்தால் நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாக சுமார் 25ஆயிரம் தொழிலளார்களின் குடும்பங்கள் வேலைவாய்ப்பினை இழந்து பரிதவித்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு தமிழக அரசு இதில் உரிய நடவடிக்கையை விரைந்து எடுத்திடவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.


பேட்டியின் போது தூத்துக்குடி ஷிப்பிங் ஏஜென்சி கணேஷ்குமார், தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க தலைவர் தியாகராஜன், ஷிப்பிங் நிறுவனத்தை சார்ந்த கணேசன் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் உடனிருந்தனர்.