கரோனா சூழல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல்வேறு துறைகள் கடும் சரிவைச் சந்தித்தன. நாடு முழுவதும் பெரும் வேலையிழப்பு ஏற்பட்டது. நிறுவனங்கள் ஊதியக் குறைப்பை மேற்கொண்டன. ஆனால், தகவல் தொழில்நுட்பத் துறையின் நிலவரம் மட்டும் இதற்கு நேரெதிர் திசையில் இருந்தது. இந்த ஒன்றரை ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மிகப் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளன. அந்நிறுவனங்களின் மூலம் அதிக வேலைவாய்ப்பு உருவாகிவந்தன; ஊழியர்களின் ஊதியமும் பல மடங்கு உயர்த்தப்பட்டன. இந்த வளர்ச்சி தற்போது இன்னும் வேகம் எடுத்திருக்கிறது. கரோனா காலகட்டத்தில் பல்வேறு துறைகளும் டிஜிட்டலை நோக்கி முழுமையாக நகர்ந்தாக வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகின. அது ஐடி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. வீட்டிலிருந்து பணிபுரிதல், ஆன்லைன் கல்வி தொடங்கி சிறிய கடைகள் கூட ஆன்லைன் வர்த்தகத்தில் நுழைந்தது வரையில் இந்தக் கரோனா காலகட்டத்தில் டிஜிட்டலை நோக்கிய நகர்வு தீவிரமடைந்திருக்கிறது.



இதனால், ஐடி பொறியியலாளர்களுக்கான தேவை மிகப் பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. தற்போது, கிட்டத்தட்ட 400 சதவீதம் அளவில் ஐடி பொறியலாளர்களுக்கான தேவை அதிகரித்து இருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது புதிதாக கல்லூரி முடித்துவரும் மென்பொருள் துறை மாணவர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. ஊரடங்கு காரணமாக சென்ற நிதி ஆண்டில் வேலைக்கு புதிதாக ஆள் எடுப்பதை பல ஐடி நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருந்தன. தற்போது முழுமூச்சுடன் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுத்துவருகின்றன. குறிப்பாக, புதிதாக கல்லூரி முடித்துவரும் மாணவர்களுக்கே ஐடி நிறுவனங்கள் முக்கியத்துவம் தருகின்றன. டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டு வேலைக்கு திரும்பிய நிலையில், 35,000 புதியவர்களை வேலையில் சேர்க்க டிசிஎஸ் திட்டமிட்டு உள்ளது. இவர்கள் அத்தனை பேருக்கும் எந்த விதமான முன் அனுபவங்களும் தேவை இல்லை. வருங்காலங்களில் பாதி வேலை அலுவலகத்தில் நேரடியாகவும், பாதி வேலை வீட்டிலிருந்தபடியும் செய்யும் ஹைபிரிட் முறை தான் பின்பற்றப்பட உள்ளது என்று கூறுகிறார்கள்.



வேலைவாய்ப்பு மட்டுமல்ல ஊதிய உயர்வும் ஐடி துறையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. கரோனா ஊரடங்கைத் தொடர்ந்து ஏனைய துறை சார்ந்த நிறுவனங்கள் ஊதியக் குறைப்பு மேற் கொண்டன. ஆனால், ஐடி துறையில் 70 -120 சதவீதம் வரையில் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இன்று இந்தியாவில் நடுத்தரக் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக மேம்பட்டதற்கு ஐடி துறைக்கு பெரும் பங்கு உண்டு. முதல் தலைமுறைப் பட்டதாரி இளைஞர்கள் ஐடி துறையில் வேலைக்கு நுழைந்து தங்கள் குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்டபடி உள்ளனர்.