நீட் தேர்வை நடத்தி வரும் தேசிய தேர்வு முகமையிடம் ரயில்வே பணிகளுக்கான தேர்வை நடத்தும் பொறுப்பை வழங்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. அதன் படி 21 ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்களை ஒன்றாக இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறையாக திகழ்ந்து வருவது ரயில்வே துறை. இதில் சுமார் 12.54 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். அரசுக்கு அதிக வருவாயையும், மக்களுக்கு வேலை வாய்ப்பையும் ரயில்வே துறை வழங்கி வருகிறது. இதற்கான பணியாளர்கள், தகுதித் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுகின்றனர்.
இந்த தேர்வை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB) நடத்தி வருகிறது. நாடு முழுவதும் உள்ள 16 ரயில்வே மண்டலங்களுக்கான சி மற்றும் டி வகை பணியாளர்கள் தேர்வை நடத்த 21 ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்கள், மண்டல வாரியாக அமைக்கப்பட்டு உள்ளன. சென்னை, சேலம், திருச்சி மண்டலங்களுக்கு சென்னை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் தேர்வு நடத்துகிறது. மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் மண்டலங்களுக்கு திருவனந்தபுரம் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் தேர்வை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், அனைத்து ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்களையும் கலைத்துவிட்டு 16 மண்டலங்களுக்கான தேர்வுகளை நடத்தும் பொறுப்பை தேசிய தேர்வு முகமையிடம் வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம், அனைத்து மண்டலங்களுக்கும் ஒரே தேர்வு நடத்தப்படும். இது தொடர்பான அறிக்கையை கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அமைச்சரவைக்கு மத்திய அரசின் பொருளாதார ஆலோசனைக்குழு அனுப்பி வைத்து உள்ளது. ரயில்வே அலுவலகங்களில் தேசிய தேர்வு முகமைகளுக்கான சிறிய அளவிலான டிஜிட்டல் அலுவலகங்களை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டின் பல்வேறு தேர்வுகள், திட்டங்களையும் மையப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்த சூழலில்தான் நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனமான ரயில்வே தேர்வுகளை மையப்படுத்துகிறது மத்திய அரசு. ஏற்கனவே தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில் பல லட்சக்கணக்கானோர் எழுதும் ரயில்வே தேர்வுகளை தேசிய தேர்வு முகமையிடம் நடத்த சொல்வதற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
ரயில்வேயில் டி மற்றும் டி வகை பணியாளர்களுக்கான தேர்வுகளை ஒரே இடத்தில் நடத்தும் மத்திய அரசின் முடிவு ஒட்டுமொத்த கட்டமைப்பையும் சீரழிக்கும் செயல் என ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் விமர்சித்து உள்ளார். “16 ரயில்வே மண்டலங்களுக்கும் ஒட்டுமொத்தமாக ஒரே தேர்வை நடத்துவது வடமாநிலத்தவர்களுக்கு தான் அதிகம் பயன் தரும். மேலும், இதில் தென் மாநிலங்களில் மறைமுகமாக இந்தியை திணிக்கும் செயல்.” என அவர் எச்சரித்து இருக்கிறார்.
விமான நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டும் வரும் சி.ஆர்.பி.எப் மற்றும் சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள் இதே போல், தேசியளவிலான தேர்வுகளை எழுதிய இந்தி பேசும் வடமாநிலத்தவர்கள்தான் என தெரிவித்த தேவசகாயம் ஐ.ஏ.எஸ், ”இவர்கள் தான், இந்தி தெரியாததற்காக திமுக எம்.பி. கனிமொழியிடம் இந்தியனா என கேள்வி எழுப்பியவர்கள். அண்மையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனையும் இதுபோல் தடுத்து நிறுத்தினர். நாளை ரயில்வேயிலும் இதுபோல் நிகழும்.” என அவர் எச்சரிக்கிறார்.