தமிழகத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு 2019 , அதாவது கடந்த 6 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ரெனியூவல் செய்யாதவர்கள் உடனடியாக ஆன்லைன் அல்லது பதிவஞ்சல் மூலமாக புதுப்பித்துக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்தாலே… உங்களுக்கு எங்க வேலை என்று தான் முதலில் அனைவரும் கேட்பார்கள். அந்தளவிற்கு அரசுப்பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தை மட்டும் தான் மக்கள் நம்பியிருந்தக் காலங்கள் உண்டு. அதற்கேற்றால் போல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10 ஆம் வகுப்பு முதல் எத்தனை டிகிரி முடித்திருந்தாலும் அதனைப்பதிவு செய்து வைத்துக்கொண்டால் சீனியாரிட்டி அடிப்படையில் அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்பது உறுதி. ஆனால் இந்த நிலை தற்போது முற்றிலும் மாறிவிட்டது. அரசுப்பணிக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கானத் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளோம். இருந்தப்போதும் சில பணிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களை சீனியாரிட்டி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியில் அமர்த்தப்படும் நிலை உள்ளது. மேலும் அரசுத்தேர்வில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படும். ஆனால் இதனையெல்லாம் பெறுவதற்கு முன்னதாக, நாம் தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நம்முடைய ஆவணங்களை அனைத்தையும் புதுப்பித்திருக்க வேண்டும்.
ஆனால் சில சமயங்களில் பல்வேறு காரணங்களுக்காக பதிவுதாரர்கள் புதுப்பிக்க தவறும் சூழல் ஏற்படும். அப்படிப்பட்டவர்களுக்கான ஒர் அரிய வாய்ப்பைத்தான் தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் படி 2014, 2015, 2016, 2017, 2018, 2019 காலக்கட்டத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு அரசுப்பணி கிடைப்பதில் பல்வேறு சிக்கல் ஏற்படும். அவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இவர்களுக்காகவே மற்றொரு வாய்ப்பினை அரசு வழங்கியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முதல் சென்னை சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் பதிவு செய்து 2014 முதல் 2019 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவைப் புதுப்பிக்க தவறிகள் மீண்டும் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை புதுப்பித்துக்கொள்ள மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதற்காக கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கிய சிறப்பு புதுப்பித்தல் முகாம் மார்ச் 1 ஆம் தேதி வரை 3 மாதத்திற்கு நடைபெறுகிறது. எனவே இதனைப்பயன்படுத்தி கடந்த 2014 முதல் 2019 வரை புதுப்பிக்கத் தவறிய பதிவுத்தாரர்கள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதள முகவரியைப்பயன்படுத்தி பதிவுதாரர்கள் பதிவைப் புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை இணையதளம் வாயிலாக பதிவு செய்யத் தெரியாதவர்கள் மேற்கண்ட தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு சென்று பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக்கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு சென்று தான் புதுப்பிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் ஆன்லைன் வாயிலாகவே நம்முடைய அனைத்துக் கல்வித்தகுதிகளையும் புதுப்பித்துக்கொள்ளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.