சென்னைப்பல்கலைக்கழகத்தில்உதவிப்பேராசிரியர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ள நிலையில் ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற ஜனவரி 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


இந்தியாவில் மிகப்பழமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக சென்னை பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென்னிந்திய மாணவர்கள் உள்பட ஒரிசா, மகாராஷ்டிரா மாநிலத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மகாணத்தின் மாணவர்களின் உயர்கல்வியை நிவர்த்திச்செய்யும் விதமாக கடந்த 1857 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கப்பட்டு தற்போதும் சிறப்பாக இப்பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது. மேலும்  தற்போதுள்ள தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் தாய் பல்கலைக்கழகம் என்ற பெருமையோடும்,  மத்திய அரசின், UGC விதிமுறைகளின் படி பல துறைகளில் இப்பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் 17 துறைகள் மற்றும் 30 பேராசிரியர்களுடன் இயங்கி வந்த இப்பல்கலைக்கழகம் எண்ணற்றத் துறைகளோடு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சென்னைப்பல்கலைக்கழகத்தில் தற்காலிக அடிப்படையில் 61 உதவிப்பேராசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இப்பணிக்குத் தகுதியாகும் நபர்களுக்கு ரூ. 30 ஆயிரம் சம்பளம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும், தற்காலிக அடிப்படையில் தான் இவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள  நிலையில், இப்பணிக்கு விண்ணப்பிக்க என்ன தகுதி? எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என அறிந்துக்கொள்வோம்.





கல்வித்தகுதி:


சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். நெட் மற்றும் செட் பொன்ற தேர்வுகளில் தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


சென்னைப்பல்கலைக்கழகத்தில் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.


பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து சுய விபரங்கள் மற்றும் கல்வித்தொடர்பான அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து ஜனவரி 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு முறை:


மேற்கண்ட முறைகளில் சென்னைப்பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளின் படி  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பளம் – உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்துத் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.


சென்னைப்பல்கலைக்கழக பேராசிரியர் பணியில் சேர்வதற்கான நிபந்தனைகள்:


இப்பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னைப்பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித்துறையில்120 நாள்கள் மட்டும் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளார்கள்.


உதவிப்பேராசிரியர் பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஒரு பருவம் அல்லது நிரந்தர உதவிப்பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படும் வரை பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதிய அடிப்படையில் உதவிப்பேராசிரியர் பணிக்கு சேர்பவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.