தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு, விமானமுன்பதிவுஎக்ஸக்யூட்டிவ் மற்றும் கேபின்குழுபணியாளர் ஆகிய பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் தாட்கோ (TAHDCO) நிறுவனம், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் திறனை மேம்படுத்தி, அவர்களுக்குத் தகுந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் நோக்கில் பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது. தொழில் புரியவும் மானியம், இயந்திர உதவி உள்ளிட்ட வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது.

இளைஞர்களுக்குச் சிறப்புப் பயிற்சி

அதன் ஒரு பகுதியாக, தற்போது விமானத் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள இளைஞர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தாட்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு, விமானத்துறையில் அதிக தேவை உள்ள 'விமான முன்பதிவு எக்ஸக்யூட்டிவ்' (Airline Reservation Executive) மற்றும் 'கேபின் குழு பணியாளர்' (Airline Cabin Crew Course) ஆகிய இரண்டு முக்கியப் பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இப்பயிற்சியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதியாகக் குறைந்தபட்சம் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

பயிற்சிவிவரம்

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 3 மாத காலத்திற்கு முழுமையான பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சியானது விமான நிலையங்களிலும், விமானங்களிலும் பயணிகளை எவ்வாறு கையாள்வது, முன்பதிவு நடைமுறைகள் மற்றும் விருந்தோம்பல் குறித்த நுணுக்கங்களைக் கற்றுத்தரும் வகையில் அமையும்.

விண்ணப்பிப்பதுஎப்படி?

விமானத் துறையில் தங்கள் கனவை நனவாக்க விரும்பும் தகுதியுள்ள இளைஞர்கள், தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும், தமிழக அரசின் "உங்கள் கனவு - என் கனவு, என் எதிர்காலம்" (https://enkanavu.tn.gov.in/) என்ற முன்னெடுப்பின் மூலமும் இளைஞர்கள் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துத் துறையில், நல்ல ஊதியத்துடன் கூடிய வேலையில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு இதுவொரு பொன்னான வாய்ப்பாகும். தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு தாட்கோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: https://tahdco.com/