பணியாளர் தேர்வாணையம் அறிவித்த நாடு முழுவதும் காலியாக உள்ள 2065 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
கொரோனா தொற்றினால் ஏற்பட்ட தள்ளி வைக்கப்பட்ட அரசின் பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் நாடு முழுவதும் காலியாக உள்ள 2065 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி 10,12, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், குறைந்தப்பட்சம் 18 வயதில் இருந்து அதிகப்பட்சமாக 42 வயதுக்குள் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 797 இடங்களுக்கு தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவர்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://ssc.nic.in/ என்ற இணையத்தளத்திற்கு சென்று இன்று இரவு 11 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 15 ஆம் தேதி இரவு 11 மணி வரை விண்ணப்ப கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஜூன் 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி அவகாசம் கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
திறனறிதல், கணிதம், ஆங்கிலம், பொது அறிவு போன்றவற்றின் அடிப்படையில் 100 கேள்விகள் கேட்கப்படும். கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் இந்த தேர்வானது நடைபெறும்.
இந்த பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மேலும் விபரங்களுக்கு / சந்தேகங்களுக்கு தேர்வாணையத்தின் தென்மண்டல அலுவலகத்தின் உதவி எண்ணான 044 285 1139, 94451 95946) உதவி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
இந்த பணியிடங்கள் தொடர்பாக விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_rhq_12052022.pdf என்ற இணையதள பக்கத்தினை பார்வையிடலாம். இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்