இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), 2026-ஆம் ஆண்டிற்கான புரொபேஷனரி ஆபிசர் (PO) காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ கிளைகளில் மொத்தம் 1,500 காலிப் பணியிடங்கள் இந்த ஆள்சேர்ப்பு நடவடிக்கையின் மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in அல்லது sbi.co.in/careers மூலம் ஆன்லைனில் தற்போதே விண்ணப்பிக்கலாம். இன்று விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், தேர்வர்கள் ஜூலை 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி என்ன?

கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் எந்தவொரு பாடப்பிரிவிலும் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கத் முழுத் தகுதியானவர்கள். இளங்கலை இறுதி ஆண்டு அல்லது இறுதி செமஸ்டர் படிக்கும் மாணவர்களும், நேர்காணலின்போது தேர்ச்சிச் சான்றிதழை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விண்ணப்பிக்கலாம்.

Continues below advertisement

வயது வரம்பு

வயது வரம்பைப் பொறுத்தமட்டில், விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு முறை

இந்த 1,500 பி.ஓ பணியிடங்களுக்கான தேர்வு முறை மூன்று முக்கிய கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக முதல்நிலைத் தேர்வு, இரண்டாம் கட்டமாக முதன்மைத் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மூன்றாம் கட்டமான உளவியல் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கும், முதன்மைத் தேர்வு விரிவான விளக்கத் தேர்வுடன் சேர்த்து மொத்தம் 250 மதிப்பெண்களுக்கும் நடைபெறும். இரண்டு தேர்வுகளிலும் தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. தேர்ச்சி பெறுபவர்களின் இறுதிப் பட்டியல் முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூபாய் 750 ஆன்லைனில் செலுத்த வேண்டும். பட்டியல் சமூகத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் எவ்வளவு?

இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகளுக்கு அடிப்படைச் சம்பளமாக மாதம் ரூபாய் 41,960 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டு வாடகை, போக்குவரத்து உள்ளிட்ட பல அரசுப் படிகளும் வழங்கப்படும். இட ஒதுக்கீடு விவரங்கள், தேர்வுத் தேதிகள், பாடத்திட்டம், தேர்வு மையங்கள் குறித்த முழுமையான புள்ளிவிவரங்கள் அடங்கிய விரிவான அறிவிப்பாணையை விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் தரவிறக்கம் செய்து முழுமையாகப் படித்துப் பார்த்துவிட்டு, எவ்விதப் பிழையுமின்றி உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.