இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

Continues below advertisement

மக்களுக்கு அரசின் மூலம் நடக்க வேண்டிய அத்தியாவசிய தேவைகளான 15 துறைகளுக்கான சேவைகள் விரைவில் கிடைப்பதற்காக கடந்த ஜூலை மாதம் தமிழக அரசின் சிறப்புத் திட்டமான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தொடங்கி நகரங்கள், பேரூராட்சிகள், ஒன்றியங்கள் வாரியாக முகாம்கள் நடைபெற்று வருகின்றன. 

பொதுமக்கள் தங்களின் நீண்ட கால குறைகள், கோரிக்கைகள் நிவர்த்தியாக வேண்டும் என்பதற்காக முகாம்களில் மனுக்கள் அளிக்கின்றனர். அதேசமயம் அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு கூடுதல் வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் ஏற்படுவதாக கூறி சுமார் 42 ஆயிரம் ஊழியர்கள் கடந்த வாரம் முகாம்களுக்கு செல்லாமலும், பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமலும் காத்திருப்பு மற்றும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Continues below advertisement

ஆய்வுக் கூட்டம் என அலைக்கழிப்பு

சிறப்பு முகாம் நடத்துவதற்கு ஏதுவாக விண்ணப்பங்கள் வழங்குவது,  முன்னேற்பாடுகள் செய்வது என  ஓரிரு நாள் முன்னதாகவே ஊழியர்கள்  களப்பணி ஆற்றுகின்றனர்.  காலை 10 மணிக்கு தொடங்கும் என்றாலும் 6 மணிக்கே முகாம் நடைபெறும் இடத்திற்கு ஊழியர்கள் செல்ல வேண்டியுள்ளது. மாலை வரை பெற்ற மனுக்களை இணையதளத்தில் பதிவேற்றி,  அதன் பிறகு இணையவழி கூட்டத்தில் விவரங்களை அளித்து  நிறைவு செய்வதற்கு நள்ளிரவு ஆவதாக கூறுகிறார்கள். அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் அலுவலகத்திற்கோ அல்லது அடுத்த முகாம் நடைபெறும் பகுதிக்கோ செல்ல வேண்டும். இதற்கிடையில் ஆய்வுக் கூட்டம் என அலைக்கழிக்கப்படுவதாகவும் ஊழியர்கள் புலம்புகின்றனர்.

ஊழியர்கள் பற்றாக்குறையால்  பணிகள் பாதிப்பு, கூடுதல் பனிச்சுமை, நிதி பற்றாக்குறை இவைகளால் ஏற்படும் மன அழுத்தம், நடைமுறை வாழ்க்கையில் நெருக்கடிகள் போன்றவற்றால் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். 

நடைமுறையில் சிக்கலானது

மக்களின் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காண்பது வரவேற்கக் கூடியதுதான். ஆனாலும் 6 மாதங்களில், 10,000 முகாம்களை நடத்தி, 45 நாட்களில் தீர்வு காண வேண்டுமென நிர்பந்தப்படுத்துவது நடைமுறையில் சிக்கலானது.  வாரத்திற்கு 3, 4 முகாம்கள் நடத்தி, அவற்றை பதிவேற்றம் செய்வதோடு மட்டும் பணிகள் முடிவதில்லை. அதன் பிறகு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு செய்ய கால அவகாசம் வேண்டும். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் முகாம் பணிகளை செய்ய வேண்டி இருப்பதால் காலதாமதம் ஏற்படவே செய்யும். அரசு துறைகளில்  ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாலும், முகாம் பணிகளை மேற்கொள்வதன் மூலமும் வழக்கமாக அந்தந்த அலுவலகங்களில் நடைபெற வேண்டிய பணிகள் பாதிக்கப்படுகின்றன.

சம்பளம் பிடிப்பதும், தண்டிப்பதும் சரியா?

அதேசமயம், ஊழியர்களின் பிரச்சினைகளை சரி செய்யாமல் போராடுபவர்களின் சம்பளம் பிடிப்பதும், தண்டிப்பதும் சரியானதல்ல. எனவே ஊழியர்களுக்கு நெருக்கடி தராமல் சிறப்பு திட்டங்களை செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமிப்பதுடன், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.