பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவில் அனுபவமில்லாத 17 ஆயிரம் பேரை புதிதாக பணிக்குச்சேர்க்கவிருப்பதாக இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.


 இந்தியாவில் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி தகவல் தொழில் நிறுவனமாக விப்ரோ இயங்கி வருகிறது. மேலும் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, புதிய பணியாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் மும்மரமாக செயல்பட்டுவருகிறது. இதனிடையே தான் இந்த 2022 ஆம் நிதியாண்டில் 12 ஆயிரம் பேரை மட்டுமே பணிக்கு சேர்க்க முடிவு செய்திருந்த நிலையில், இந்த எண்ணிக்கை திடீரென உயர்த்தப்பட்டு தற்போது 17 ஆயிரம் அனுபவமற்ற அதாவது ஃப்ரஷர்களை பணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளது.  மேலும் பணி நியமனங்கள் அனைத்தும் தற்போது கடைசி ஆண்டு படிப்பில் உள்ள மாணவர்களுக்கு அவரவர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மேற்கொள்ளவிருக்கிறது.





இதுக்குறித்து விப்ரோ நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியான ஜதின் தலால் பேட்டி ஒன்றில் தெரிவிக்கையில், விப்ரோ நிறுவனத்தின் நிகழ்கால் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார். மேலும் தற்போது இந்நிறுவனம் வருடாந்திர நிதி இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மைல்கல்லை கடந்துப் பயணிக்கிறது என கூறியிருக்கிறார். இதோடு கடந்த 12 மாதங்களில் மட்டும் 2. 4 பில்லியன் டாலர்கள் வருமானத்தைப்பெற்று HCL டெக்னாலஜிஸ் நிறுவன நிதிவருவாயை நெருங்கியுள்ளது. எனவே விரைவில் இந்தியாவின் 3 வது பெரிய ஐடி நிறுவனமாக விப்ரோ நிறுவனம் உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.


குறிப்பாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்ற தியரி டெலாபோர்ட், விப்ரோவில் வியக்கத்தக்க பல மாற்றங்களை நிறுவனத்தில் மேற்கொண்டார். இதோடு இந்நிறுவனத்துக்கு பெரிய ப்ராஜெக்ட்கள் கொண்டு வந்ததிலிருந்து பல திறமையாளர்களை பணியமர்த்தியது முதல் அவரின் நடவடிக்கைகளினால் விப்ரோ நிறுவனத்தின் வருவாய் 6.9% அளவுக்கு உயர்ந்தது. மேலும் தற்போது விப்ரோவிடம் 3 பில்லியன் டாலர்கள் மதிப்புக்கான காண்ட்ராக்ட் கிடைத்திருக்கிறது.



இந்நிலையில் தான் தற்போது பல்வேறு புதிய பணியாளர்கள் பணியமர்த்தப்பட இருக்கின்றனர் எனவும், ஏற்கனவே 10 ஆயிரம் ஃப்ரஷர்களை பணியமர்த்த திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது 16 ஆயிரம் முதல் 17 ஆயிரம் ஃப்ரஷர்களைப் பணியமர்த்த முடிவெடுத்திருப்பதாக ஜதின் தலாக் தெரிவித்துள்ளார். மேலும் இந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் மட்டும் மொத்தமாக 23 ஆயிரத்து 653 பேரை விப்ரோ நிறுவனம் பல திறமையானவர்களை பணியில் சேர்ந்துள்ளது.  எனவே விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ள இந்த அறிவிப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறும் இந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.