இந்திய ரயில்வே துறையின் உணவுப்பிரிவு மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள விஜிலென்ஸ் அதிகாரி மற்றும் உதவி விஜிலென்ஸ் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் கீழ்  இரயில்வே துறை இயங்கிவருகிறது. இத்துறையின் கீழ் இயங்கிவரும் ரயில்களில் ஆண்டுக்கு 500 கோடிக்கும் மேல் மக்கள் பயணம் செய்துவருகின்றனர். ரயில்வே பொதுமக்களின் பொதுப்போக்குவரத்தை மிகவும் எளிதாக்கி வருகிறது. இப்படி மக்களிடம் மிகவும் பிரபலமான இந்திய ரயில்வே துறையில் வேலை கிடைக்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். அதற்கேற்றால் போல்தான்  இந்திய ரயில்வே துறையின் கீழ் பல பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகும். இந்நிலையில் தற்போது ரயில்வே துறையின் உணவு பிரிவு மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள விஜிலென்ஸ் மற்றும் உதவி விஜிலென்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் செப்டம்பர் 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் என்னென்ன தகுதிகளை விண்ணப்பதாரர்கள் கொண்டிருக்கவேண்டும் என தெரிந்துகொள்வோம்.



 கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு :


ரயில்வே துறையின் உணவுப்பிரிவு மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள விஜிலென்ஸ் மற்றும் உதவி விஜிலென்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள்,  கேட்டரிங், சுற்றுலாத்துறை மேம்பாடு போன்ற துறைகளில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டரில் அடிப்படையான விஷயங்களான எம்.எஸ்.எக்சல் (MX-Excel) பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். எனவே மேற்கண்ட தகுதியோடு விண்ணப்பிக்கும் நபர்கள் 55 வயதிற்குள் இருக்க வேண்டும் எனவும் வேலை வாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரயில்வே துறையில் பணிக்கு  விண்ணப்பிக்கும் முறை:


இந்திய ரயில்வே துறையில் கேட்டரிங் பிரிவில் விஜிலென்ஸ் மற்றும் உதவி விஜிலென்ஸ் அதிகாரியாக பணிபுரிய விரும்புவோர் முதலில், அதற்கான விண்ணப்பத்தை http://www/irctc.com  அல்லது http://www.irctc.com/assets/image/VN%2016%202021% என்ற அறிவிப்பில் உள்ள மாதிரி விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.


பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள பெயர், கல்வித்தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட அடிப்படை தகவல்களை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். இதனையடுத்து பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல்களை வைத்து வருகின்ற செப்டம்பர் 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை ரயில்வே துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.



இதனையடுத்து ரயில்வே துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி விண்ணப்பத்தார்களுக்கு தேர்வு நடைபெறும் எனவும், இதனையடுத்து தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு தகுந்த சம்பளம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.