மத்திய அரசின் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தில் 300 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் வருகின்ற செப்டம்பர் 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.


மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாக  நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டு செயல்பட்டுவருகிறது. பல்வேறு துறைகளில் பலர் பணியாற்றி வரக்கூடிய நிலையில் தற்போது, நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆன்லைன் மூலமாக மட்டுமே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேறு என்ன தகுதிகள்? உள்ளது என இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.



வயது மற்றும் கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பெற்றதோடு குறைந்த பட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் விண்ணப்பத்தாரர்கள்  SC / ST / PWD  பிரிவினராக இருந்தால் 55% மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு விண்ணப்பிக்கும்  நபர்கள் 01-04-2021 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அதேப்போல் அவர்கள் SC/ST பிரிவினராக இருந்தால்  5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வுகள் கிடைக்கப்பெறும்.


எனவே மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள், https://www.newindia.co.in/portal/readMore/Recruitment என்ற இணைய தளப்பக்கத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும் SC / ST / PWD பிரிவினருக்கு ரூ. 100
மற்றவர்களுக்கு ரூ. 750 என விண்ணப்பக்கட்டணம் செலுத்தி வருகின்ற செப்டம்பர் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதனையடுத்து தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், அவர்களுக்கு முதல் நிலை, முதன்மைத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வு நடைபெறும் முறைக்குறித்தும் அனைவரும் அறிந்துக்கொள்வோம்.


முதல்நிலைத் தேர்வு:  நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தில் அசிஸ்டென்ட் மேனேஜர் பதவிக்கான முதல்நிலைத்தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறவுள்ளது. இதில் இதில் ஆங்கிலம் (English language),  திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதத்தில் (Numerical ability) இருந்து 100 கேள்விகள் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்நிலைத்தேர்வுகள் வருகின்ற அக்டோபர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் அடுத்ததாக முதன்மைத்தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். இத்தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும் நிலையில், முதல் பகுதியில் கொள்குறி வகை வினாக்கள் கொண்ட தேர்வு, 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். 2 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வில் ஆங்கிலம், திறனறிதல் மற்றும் கணிதம் மற்றும் பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial Awareness) என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





அதேபோன்று இரண்டாம் பகுதியில் கட்டுரை எழுதுதல் (Letter Writing-10marks & Essay-20 marks) தேர்வு 30 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இந்தத் தேர்வுக்கான கால அளவு 30 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். இந்த முதன்மைத் தேர்வுகள் நவம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முதல்நிலை மற்றும் முதன்மைத்தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் இறுதியில் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். கடந்த தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இப்பணியிடங்கள் நிரப்பப்படும்.  இறுதியில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ. 60 ஆயிரம் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் தகவல்களை
https://www.newindia.co.in/cms/336f90c8-319f-46a6-8269-c94f5a53c1d9/Detailed%20Advt.%20NIACL%20AO%20RECTT.%202021%2024.08.21.pdf?guest=true என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.