நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைதேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளைய தினம் 24.07.2026 (வெள்ளிக்கிழமை) அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

Continues below advertisement

25-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை 24-ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை இம்முகாம் நடைபெறவுள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் நாகப்பட்டினம் மாவட்டம் மட்டுமன்றி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 25-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் நேரில் பங்கேற்கின்றன. அந்நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 500-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களைத் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு

இம்முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்துகொள்ளலாம்.

கல்வித் தகுதி: 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தவர்கள், பட்டயப்படிப்பு (Diploma), ஐ.டி.ஐ (ITI), பி.இ (B.E.) மற்றும் பிற பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கான பணி வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.

இலவச ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்

வேலைவாய்ப்பு மட்டுமன்றி, இம்முகாமில் பங்குபெறும் இளைஞர்களுக்குப் பல்வேறு கூடுதல் வழிகாட்டுதல்களும் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

* இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் (Skill Development Training) குறித்த தகவல்கள்.

* சுயதொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு வங்கிக் கடன் வசதி பெறுவதற்கான ஆலோசனைகள்.

* அயல்நாட்டு வேலைவாய்ப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் தகவல்கள்.

"நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைதேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்தி, நேரில் கலந்துகொண்டு பயனடையுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், கேட்டுக்கொண்டுள்ளார்.

தேவையான ஆவணங்கள் மற்றும் பதிவு செய்யும் முறை

முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் தங்களது;

1. சுயவிவர அறிக்கை (Resume / Bio-data)

2. கல்விச் சான்றிதழ்களின் நகல்கள்

3. அடையாளச் சான்று (ஆதார் அட்டை)

4. பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்

5. முன்அனுபவம் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்கள்

ஆகியவற்றுடன் நேரில் வருகை தர வேண்டும். மேலும், இதில் பங்கேற்க விரும்பும் வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற அரசு இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முதலாளிகள் மற்றும் இளைஞர்களுக்கு வேண்டுகோள்

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களும் இம்முகாமில் கலந்துகொண்டு, தங்களுக்குத் தேவையான உள்ளூர் பணியாளர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாம் குறித்த கூடுதல் தகவல்களுக்குத் தொலைபேசி எண்: 04365-252701 என்ற எண்ணில் நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர் புகொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர் அனைவரும் இந்த மெகா வாய்ப்பினை பயன்படுத்தி பயனடைய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.