வேலைவாய்ப்பு துறையின் சார்பாக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

அசிஸ்டெண்ட் லோகோ பைலட் தேர்விற்கான அறிவிப்பு
 
தற்பொழுது ஒன்றிய அரசு தேர்வாணையத்தால் 2026-ஆம் ஆண்டு திட்ட நிரலின்படி SSC CGL 2026 மற்றும் RRB அசிஸ்டெண்ட் லோகோ பைலட்  தேர்விற்கான அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து SSC (CGL-2026) மற்றும் RRB (ALP-2026) தேர்விற்கும் ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கே.புதூர், மதுரை அலுவலகத்தில் தொடங்கப்பட்டு, சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் மற்றும் மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இக்கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற விருப்பமுள்ள போட்டித் தேர்வு ஆர்வலர்கள், ஆதார் அட்டை நகல்  மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஆகியவற்றுடன் இவ்வலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு பயிற்சியில் சேரலாம்.
 
TN Career Services Employment
 
அனைத்து வகையானப் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித் தேர்வு ஆர்வலர்கள், வேலைவாய்ப்பு துறையின் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளமான https://www.tamilnaducareerservices.in.gov.in  என்ற இணையத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து கொண்டு, இத்தேர்விற்கு தேவையான பாடக் குறிப்புகள், மாதிரி தேர்வுகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகளை pdf – வடிவில் பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்பெறலாம். மேலும், அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் பதிவு காணொளி பாடக்குறிப்புகள் “TN Career Services Employment” என்ற  You Tube பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசுப் பணிக்கு தொடர்ந்து படித்து வெற்றி பெற காத்திருக்கும் இளைஞர்களின் கனவை நனவாக்கும் நோக்கில் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநர் த.அருண்நேரு அவர்கள் தெரிவித்தார்.