மயிலாடுதுறை: மத்திய அரசுப் பணிகளில் சேர ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு மத்திய பாதுகாப்புப் படைகளில் காலியாக உள்ள 25,487 பொதுப்பணி காவலர் (Constable GD) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல் முகாம் பற்றி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

காலிப்பணியிடங்களின் விவரம்

மத்திய அரசின் பல்வேறு பாதுகாப்புப் பிரிவுகளில் ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களின் விவரம் வருமாறு:

* சி.ஐ.எஸ்.எஃப் (CISF): 14,595 பணியிடங்கள்

Continues below advertisement

* சி.ஆர்.பி.எஃப் (CRPF): 5,490 பணியிடங்கள்

* எஸ்.எஸ்.பி (SSB): 1,764 பணியிடங்கள்

* அஸ்ஸாம் ரைபிள்ஸ் (Assam Rifles): 1,706 பணியிடங்கள்

* ஐ.டி.பி.பி (ITBP): 1,293 பணியிடங்கள்

* பி.எஸ்.எஃப் (BSF): 616 பணியிடங்கள்

* செயலக பாதுகாப்புப் படை (SSF): 23 பணியிடங்கள்

மொத்த காலிப்பணியிடங்கள்: 25,487

கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.01.2026 அன்று 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர் 02.01.2003 முதல் 01.01.2008 வரையான இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

வயது தளர்வு: அரசு விதிகளின்படி, எஸ்சி / எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் காலக்கெடு

தகுதியுடைய இளைஞர்கள் https://ssc.gov.inஎன்ற இணையதள முகவரியில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 31.12.2025 இரவு 11 மணி ஆகும்.

 * விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100/-

* விலக்கு: பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம்

இந்தக் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு நான்கு நிலைகளில் நடைபெறும்:

* கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு (CBT)

 * உடல் திறன் சோதனை (PET)

 * உடல் தரச் சோதனை (PST)

 * மருத்துவ பரிசோதனை மற்றும் ஆவண சரிபார்ப்பு

எழுத்துத் தேர்வுத் திட்டம்

முதன்முறையாக ஆன்லைன் எழுத்துத்தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர தமிழ் மொழியிலும் நடத்தப்பட உள்ளது. தேர்வில் மொத்தம் 80 கொள்குறி வகை (Objective) கேள்விகள் கேட்கப்படும்.

* பாடப்பிரிவுகள்: பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு, பொது அறிவு, பொது விழிப்புணர்வு, கணிதம், ஆங்கிலம் அல்லது இந்தி.

* மதிப்பெண்கள்: ஒரு சரியான பதிலுக்கு 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதிலுக்கு 0.25 மதிப்பெண் குறைக்கப்படும் (Negative Marking).

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் அழைப்பு

இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

"மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக, 29.12.2025 (திங்கள்கிழமை) காலை 11 மணியளவில் விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது."

முன்பதிவு விவரம்

இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள், மயிலாடுதுறை கால் டாக்ஸி பெட்ரோல் பங்க் அருகில், பாலாஜி நகர், 2-வது குறுக்கு தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வரலாம். அல்லது 9499055904 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தங்கள் விவரங்களை அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம். அரசுப் பணியில் சேரத் துடிக்கும் இளைஞர்கள் இந்த விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்டு, தேர்வுக்கான நுணுக்கங்களைக் கற்றறிந்து பயனடையுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.