TNPSC GRP 4: குரூப் 4 பணியிடங்களுக்காக ஆவணங்களை முறையாக பதிவேற்றம் செய்வதற்கான அவகாசம் இன்று தொடங்குவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு:
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அறிவிக்கை எண்: 01/2024, நாள் 30.01.2024 இன் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - (தொகுதி IV பணிகள்) பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டதில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் சில விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களை குறைபாடாக / சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக 07.12.2024 முதல் 21.12.2024 இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல் அவ்விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அவ்விண்ணப்பதாரர்கள் அனைவரும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறைப் பதிவு (OTR) வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் கோரிக்கை (claim) விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது’ என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.
எனவே, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தேர்வாளர்கள் தங்களது ஆவணங்களை முறையாக பதிவேற்றம் செய்துகொள்ளுங்கள்.
நடந்து முடிந்த குரூப் 4 தேர்வுகள்:
குரூப் 4 தேர்வு வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பதவி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப நடத்தப்படுகிறது. தற்போது வனக் காப்பாளர், வனக் கண்காணிப்பாளர் பணி இடங்களுக்கும் குரூப் 4 தேர்வு மூலமே ஆட்சேர்க்கை நடைபெறுகிறது. டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்தத் தேர்வை நடத்துகிறது.
2024ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 15,91,429 பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் 28ஆம் தேதி வெளியாகின. அதே நாளில் , காலி பணியிடங்களின் எண்ணிக்கையும் 559 உயர்த்தப்பட்டதன் மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக அதிகரித்தது.
தொடர்ந்து குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் தொடங்கின. அதில் ஏற்பட்ட குளறுபடிகளை தொடர்ந்து தான், தற்போது தேர்வர்கள் ஆவணங்களை முறையாக பதிவேற்றம் செய்ய மீண்டும் அவகாசம் வழங்கி டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, , குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கான கலந்தாய்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உத்தேசமாகத் தொடங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.