திருமணம் ஆகாத அரசு ஊழியர் மரணமடைந்தால், அவரது சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தெரிவித்துள்ளது.


இதுதொடர்பான விவரம் ஆர்டிஐ மனு மூலம் பெறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005- தகவல் கோரி இருந்தார்.  இதற்கு பதிலளித்து, ஆர்டிஐ பொது தகவல் அலுவலர் / அரசு சார்பு செயலாளர் சித்ரா கூறி உள்ளதாவது:


சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம்

’’தங்களது மனுவில் கோரப்பட்ட தகவலுக்கு கீழ்க்கண்ட விளக்கம் அளிக்கப்படுகிறது. திருமணம் ஆகாத ஒரு அரசு ஊழியர் பணியில் இருந்து ஒய்வு பெறுவதற்கு முன்பு இறந்து விட்டால், அவரது திருமணமாகாத சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கலாம் என அரசாணை (நிலை) எண்.134, தொழிலாளர் மற்றம் வேலைவாய்ப்புத் துறை, நாள் 22,10,1998-ல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் நகல் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது’’.


இவ்வாறு ஆர்டிஐ பொது தகவல் அலுவலர் தெரிவித்துள்ளார்.


திருமணமான அரசு ஊழியர் என்றால் எப்படி?


இதற்கிடையே திருமணமான அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது மரணம் அடைந்தால், அவரின் கணவன் அல்லது மனைவிக்கோ அல்லது வாரிசுகளுக்கோ அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில், அரசு வேலை வழங்கப்பட்டு வருவது ஆண்டாண்டு காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை என்பது குறிப்பிடத்தக்கது. 


இதையும் வாசிக்கலாம்: LIC Scholarships: படித்து முடிக்கும்வரை அனைத்து துறை மாணவர்களுக்கும் உதவித்தொகை: எல்ஐசி அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?