மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியது: 2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி புதிதாக அமைக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒப்பந்த அடிப்படையில் 11 பணியாளர்கள் நியமிப்பதற்காக தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதில், பாதுகாப்பு அலுவலர் பணிக்கான 2 இடங்களுக்கு விண்ணப்பிக்க சமூகவியல், சமூகபணி, உளவியல், குழந்தை வளர்ச்சி, குற்றவியல் மற்றும் கல்வியியல் ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தைகள் நலன், சமூக நலன், கல்வி, தொழிலாளர் ஆகியவற்றில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணிக்கான 1 இடத்துக்கு விண்ணப்பிக்க, பி.எல்., அல்லது எல்.எல்.பி., குழந்தை நலன், சமூக நலன், தொழிலாளர் ஆகியவை தொடர்பான சட்ட பணிகளில் ஒர் ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேற்கூறிய இரண்டு பணியிடங்களுக்கு ஊதியமாக ரூபாய் 21000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆற்றுப்படுத்துநர் (கவுன்சிலிங்) பணிக்கான 1 பணியிடத்துக்கு, சமூகப்பணி, உளவியல், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆற்றுப்படுத்துதல் பணியில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சமூகப் பணியாளர் பணிக்கான 2 பணியிடங்களுக்கு, சமூகப்பணி, உளவியல், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குழந்தை தொடர்பான களப்பணியில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கணக்காளர் பணிக்கான 1 பணியிடத்துக்கு, பி.காம்., அல்லது எம்.காம்., படித்த கணக்காளர் பணியில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராய் இருத்தல் வேண்டும். தகவல் பகுப்பாளர் பணிக்கான 1 பணியிடத்துக்கு பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ் (அ) புள்ளியியல் (அ) கணிதம்) படித்த, தகவல் தொகுப்பாளர் பணியில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேற்கூறிய 3 பணிகளுக்கு ரூபாய் 14000 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை Goole News - ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கான 1 பணியிடத்துக்கு, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கணினி பயிற்சி முடித்த சான்றிதழ் வேண்டும். கணினி சார்ந்த பணிகளில் ஒர் ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு ரூபாய் 10000 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புறத்தொடர்பு பணியாளர் பணிக்கான 2 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, 10 அல்லது 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, குழந்தை நலன் சார்ந்த சான்றிதழ் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தை நலன் தொடர்பான களப் பணியில் ஒர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு ரூபாய் 8000 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய அனைத்துப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க 40 வயதுக்கு மிகாதவராக இருத்தல் வேண்டும். மேற்கூறிய அனைத்துப் பணிகளுக்கும் 62 வயதிற்கு மிகாமல் இருக்கும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு அதற்கான அமைந்த விண்ணப்பப் படிவத்தை நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது மயிலாடுதுறை மாவட்ட இணைய தளத்திலிருந்து (https://mayiladuthurai.nic.in/) பதிவிறக்கம் செய்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை-609001 என்ற முகவரியில் ஜனவரி 31-ஆம் தேதிக்கு முன்னதாக கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை நேரிலோ அல்லது 04365-253018, 8015222327 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.