தேசிய சிறு தொழில்கள் கழகத்தின் சார்பில் இன்று சென்னையில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் ஐ.டி.ஐ , டிப்ளமோ மற்றும் பட்டாதாரிகள் கலந்துக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளுடன் தேசிய சிறுதொழில் கழகம் (National small industries corporation – NSIC) செயல்பட்டுவருகிறது. 1955 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் நாடு முழுவதும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் அவற்றைத் தொடங்குவதற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் அளித்து வருகிறது. இதோடு மட்டுமின்றி புதிய தொழில் தொடங்கவும், ஏற்கனவே உற்பத்தி செய்து வரும் தொழில் அதிபர்கள் தாங்கள் தங்கள் தொழிலை மேலும் விரிவுபடுத்த கடன் பெறவும், உற்பத்தி செய்யும் பொருட்களை மத்திய, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவும், உங்கள் தொழிற்சாலை எந்த நிலையில் உள்ளது என தரச் சான்றிதழ் பெறுவதற்கும், நம் நாட்டிலும் அயல் நாட்டிலும் நடைபெறும் கண்காட்சிகளில் உங்களின் உற்பத்திப் பொருட்களைக் காட்சிபடுத்தவும், மற்றும் உற்பத்திப்பொருள்களை ஏற்றுமதி செய்வது பற்றிய வழிகாட்டுதல்களையும் செம்மையாக வழங்கிவருகிறது. மேலும் மத்திய மாநில அரசின் டெண்டர்களில் கட்டணமில்லாமல் விண்ணப்பிக்கவும் மற்றும் விண்ணப்பிக்கும்போது நிறுவனத்திற்கு கட்ட வேண்டிய முன்பணம் முழுவதிலுமிருந்து விலக்கு பெறுவதற்கும் என எண்ணற்ற சேவைகளையும் தேசிய சிறு தொழில்கழகம் செய்துவருகிறது.
இதோடு மட்டுமின்றி இளம் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக அவ்வப்போது கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக பல தொழில்நுட்ப பிரிவில் படித்த மாணவர்கள் இதன் மூலம் பயன்பெற்றுள்ளனர். குறிப்பாக தமிழகத்தைப்பொறுத்தவரை தேசிய சிறு தொழில்கள் கழகத்தின் தொழில்நுட்ப சேவை மையம் செயல்பட்டுவருகிறது. இங்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து பயிற்சிகள் நடைபெற்றுவரும் நிலையில் அவ்வப்போது இளைஞர்களான வேலைவாய்ப்பு முகாமும் நடைபெறும். அதன்படி சென்னை ஈக்காட்டு தாங்கலில் உள்ள மத்திய அரசு நிறுவனமான தேசிய சிறு தொழில்கள் கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை நடைபெறுகிறது. எனவே பொறியில் மற்றும் கலை அறிவியல் பிரிவில் படித்த பட்டதாரிகள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9.30 மணி முதல் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தேசிய சிறு தொழில்கள் கழகத்தின் வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்த கூடுதல் விபரங்களை 7305375041 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வேலைத்தேடிக்கொண்டு பட்டதாரி இளைஞர்கள் உடனடியாக இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம்.