தமிழக அரசின் தொழில்நுட்பக்கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் முடித்தவர்கள் நில அளவைக்கான ( தனியார் சர்வேயர்) உரிமம் பெற நடத்தப்படும் 3 மாதப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழக வருவாய் மற்றும் பத்திரப்பதிவு துறையின் கீழ் நிலங்களை அளவீடு செய்தல், மதிப்பிடுவது போன்ற பல பணிகளை சர்வேயர்கள் மேற்கொண்டுவருகின்றனர். குறிப்பாக தங்களுடைய நிலங்களை அளவீடு செய்வதற்கு சர்வேயர் வர வேண்டும் என்றால் பல நாள்கள் அல்லது மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிருக்கும். இல்லையென்றால் ஜமா பந்தி மூலம் தங்களுடைய நிலங்களை அளவீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் முன்வைப்பார்கள். இந்நிலையில் தான் தமிழக நில அளவை மற்றும் நிலவரித்திட்டத்துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து தனியார் சர்வேயர் ஆவதற்கான 3 மாத கால பயிற்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? தகுதி என்ன என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
தனியார் சர்வேயர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் முறை:
தமிழக நில அளவை மற்றும் நிலவரித்திட்டத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஓரத்தநாடு நில அளவைப் பயிற்சி நிலையத்தில் 100 பேருக்கும், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செயல்படும் பயிற்சி நிலையத்தில் 50 பேர் என மொத்தம் 150 பேருக்கு பயிற்சிகள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: தமிழக அரசின் நில அளவைப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தின் கீழ் சிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு – 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பயிற்சிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.. மேலும் இந்த பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நவம்பர் 10ஆம் தேதிக்குள் அஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
முதல்வர் இணை இயக்குநர்,
நில அளவைப்பயிற்சி நிலையம்,
ஒரத்தநாடு -614625,
தஞ்சாவூர் மாவட்டம்
இதோடு நில அளவைப்பயிற்சிக்கான கட்டணம் ரூ. 30 ஆயிரம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நில அளவைப்பயிற்சி பெறுவோர்களுக்கு அரசுப் பணியில் எந்தவித முன்னுரிமை எதுவும் வழங்கப்படாது எனவும், பயிற்சி பெறுவோருக்கு வேலைவாய்ப்போ அல்லது ஊதியமோ வழங்கப்படாது. இருந்தப்போதும் பயிற்சியை நிறைவு செய்த பின், நில அளவை செய்வதற்கான உரிமம் பெறலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக தமிழகத்தில் இதுப்போன்ற தனியார் சர்வேயர் பயிற்சிக்கு வி.ஏ.ஓக்கள் பல்வேறு எதிர்ப்புகளைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.