intel Layoff: கூடுதல் செலவினங்களை தவிர்க்கும் நோக்கில், பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்வதாக இன்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.


18,000 பேரை பணிநீக்கம் செய்யும் இன்டெல்:


அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல்,  தனது செயல்பாடுகளை நெறிப்படுத்தும் நடவடிக்கையான பணியாளர்களில் 15 சதவீகிதத்திற்கும் அதிகமானோரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் முடிவடைந்த ஜுன் மாத காலாண்டில் இன்டெல் நிறுவனம் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இழப்பை சந்தித்தது. இதையடுத்து நடப்பாண்டு சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 83 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான செலவைக் குறைக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இன்டெல் கடந்த ஆண்டு இறுதியில் 1,24,800 பணியாளர்களைக் கொண்டிருப்பதாக அறிவித்தது. அதன்படி, தற்போது அறிவித்துள்ள பணிநீக்க நடவடிக்கைகள் சுமார் சுமார் 18,000  பேரின் பணிகளை பறிக்கும் என கருதப்படுகிறது.






சறுக்கலை காணும் இன்டெல் நிறுவனம்:


பல தசாப்தங்களாக, மடிக்கணினிகள் முதல் தரவு மையங்கள் வரை அனைத்தையும் இயக்கும் சிப்களுக்கான சந்தையில் இன்டெல் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், அதன் போட்டியாளர்கள் குறிப்பாக என்விடியா சிறப்பு AI புராசசர்களில் முன்னணியில் உள்ளது. போட்டியாளர்களான என்விடியா, ஏஎம்டி மற்றும் குவால்காம் ஆகியவற்றின் வலுவான சவால்களை எதிர்கொண்டு, பின்னடைவை சந்தித்த பிறகு,  செயற்கை நுண்ணறிவு பிரிவில் கவனம் செலுத்த உள்ளதாக இன்டெல் நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், இஸ்ரேலில் உள்ள தனது சிப் தயாரிப்பு ஆலையை விரிவுப்படுத்தும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அந்த பணிகளுக்கு கூடுதலாக 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.