யுடிஐடி திட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக மாநில மாற்றுத் திறனாளிகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது.


நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் பற்றிய புள்ளிவிவரங்களைச் சேகரிக்கவும், அரசின் திட்டங்களை அவர்களுக்கு எளிதில் கொண்டு சேர்க்கும் நோக்கிலும் அவர்களுக்கு பிரத்யேக தேசிய அடையாள அட்டை (யுடிஐடி) வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. மத்திய அரசால் இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளி கள் உரிமை சட்டம் 2016-ல் அறிவிக்கப்பட்ட 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கான மாநில ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.


இது தொடர்பான அறிக்கையில், யுடிஐடி திட்டத்தின் கீழ் மாநில ஒருங்கிணைப்பாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது 6 மாதங்களுக்கான தற்காலிகப் பணியிடம். தேவைக்கேற்ப 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும். இந்தப் பணிக்கான தகுதிகள், பொறுப்புகள் உள்சேர்க்கை 1 மற்றும் 2ல் பட்டியலிடப்பட்டுள்ளது,


விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்கள், ஆவணங்களுடன் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இல்லாவிட்டால் scd.tn@nic.in அல்லது grhscda@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் அனுப்பலாம். 15.02.2003 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம்.


கல்வித் தகுதி:


1. கணினி அறிவியல் பொறியியல் (இளநிலை)
2. யுடிஐடி அல்லது பிற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றியிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.


வயது தகுதி:


விண்ணப்பதாரருக்கு அதிகபட்சமாக 35 வயதாகியிருக்க வேண்டும். விண்ணப்பம் செய்யும் கடைசி நாளில் அவருக்கு அதிகபட்ச வயது 35 என்றிருக்க வேண்டும்.


மொழி:


மாநில ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்பவர் ஆங்கிலம் மற்றும் தமிழில் புலமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.


சம்பள விவரம்:


கவுரவத் தொகையாக பிரதி மாதத்திற்கு ரூ.40 ஆயிரம், பயணப்படியாக ரூ.10 ஆயிரம் அல்லது எது குறைவான தொகையோ அது கொடுக்கப்படும்.


பணிக்காலம்:


6 மாதங்களுக்கு பணி உறுதி. அதன் பின்னர் தேவைக்கேற்ப 3 ஆண்டுகளாக பணிக்காலம் நீட்டிக்கப்படும். இது தற்காலிகப் பணி என்பதால் எவ்வித முன்னறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்யப்படலாம்.


மாநில ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான பொறுப்புகள்


1. மாநில அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு யுடிஐடி திட்டத்தை மேம்படுத்துதல்
2. திட்ட முன்னேற்றத்தை கண்காணித்தல்
3. மாவட்டம், வட்டம், கிராமம் வாரியாக தகவல்களை திரட்டி அதற்கான அறிக்கையை தயார் செய்தல்
4. மாற்றுத் திறனாளிகள் நல ஆணையருக்கு முகாம்கள் நடத்த உதவியாக இருத்தல்.
5. திட்டத்தில் ஏதேனும் சிக்கல்கள் வந்தால் அதனை உடனடியாக மேலிடத்திற்கு தெரியப்படுத்துதல்
6. இதுதவிர வேறு என்ன பணி வழங்கப்படுகிறதோ அவற்றை சிறப்பாக செய்தல்.
7. இந்த வேலைகளை மேற்கொள்ளத் தேவையான அனைத்து ஆதரவையும் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் உறுதி செய்வார். 


இவ்வாறு அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.