மலை கிராம பெண்களிடமிருந்து துணை செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் விண்ணப்பங்களை செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


தமிழகத்தில் மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களுக்கு சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் கிடைக்கவும், அதனை முறைப்படி வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், இந்தாண்டு அதே போன்ற அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி,  சேலம் மாவட்டத்தில் காடையாம்பட்டி வட்டாரத்தில் பூமரத்தூர், கொளத்தூர் வட்டாரத்தில் பாலமலை, பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் கம்மாளப்பட்டி, கோணமடுவு, கூட்டாறு, அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் ஆலடிப்பட்டி, கெங்கவல்லி வட்டாரத்தில் கூடமலை, 74-கிருஷ்ணாபுரம், நரிப்பாடி, வாழக்கோம்பை, உலிபுரம்புதூர், மண்மலை செங்காடு, பெரியபக்களம், ஓடைக்காட்டுபுதூர், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கருமந்துறை, தேக்கம்பட்டு, மணியார்குண்டம், பகுடுப்பட்டு, கரியகோயில், குன்னூர், சூலாங்குறிச்சி, தாள்வள்ளம், ஏற்காடு வட்டாரத்தில் மாரமங்கலம், கொட்டச்சேடு, தழைச்சோலை, கோயில்மேடு, ஜெரினாக்காடு, நாகலூர், மஞ்சக்குட்டை, கொலகூர், செம்மநத்தம், பிளியூர், பட்டிபாடிவேலூர் ஆகிய மலைவாழ் பகுதிகளைச்சேர்ந்த பெண்கள் துணை செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கார்மேகம் செய்தி அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.





எனவே ஆட்சியர் அறிவிப்பின் படி, மேற்கண்ட மலைக்கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் எப்படி துணை செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டும், தகுதி என்ன? என்பது குறித்து இங்கு விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.  சேலம் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் அல்லது அதன் குக்கிராமங்களில் வசிக்கும் பெண்களிடம் இருந்து துணை செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.  மேலும் டிசம்பர் 31, 2021 அன்றைய தேதிக்குள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ஏற்கனவே அங்கன்வாடி பணியாளராக இருப்பின், அவர்கள் 1980 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்களாக மட்டுமின்றி 42 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் மலைப்பகுதிகளில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் பணிபுரியும் முதன்மை அங்கன்வாடி பணியாளர்களாக இருப்பின் குறைந்தது 2ஆண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


எனவே மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் துணை செவிலியர் பயிற்சிக்கான விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் விண்ணப்பங்களை துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள், பழைய நாட்டாண்மை கழக கட்டட வளாகம், சேலம் 636 001 என்ற முகவரிக்கு வரும் 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். இதோடு மறக்காமல்  கல்வித் தகுதி மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் சான்றொப்பம் செய்யப்பட்ட இதர சான்றிதழ் நகல்களுடன் இணைத்து விண்ணப்ப உறையின் மீது 2 ஆண்டு பல்நோக்கு சுகாதார  பணியாளர் பயிற்சி என்று எழுதி அனுப்ப வேண்டும்.





விண்ணப்பத்தின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அரசு செலவில் முறையான பயிற்சி அளிக்கப்படும். பின்னர் பயிற்சி பெற்றவர்கள் பழங்குடியின கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாாரநிலையங்களில்  குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.  எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், மலைப்பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையங்கள் உள்ளடக்கிய மலைப்பகுதியில் வசிப்பதற்கான இருப்பிடச்சான்றிதழ் நகல் ஒன்றினை வாங்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அதனை சேலம் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் கட்டணமின்றி பயிற்சிக்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.