காக்னிசன்ட் பன்னாட்டு ஐ.டி. நிறுவனத்தில் ஃப்ரெஷர்கள் எனப்படும் புதிதாக வேலையில் சேருவோருக்கு வெறும் ரூ.2.52 லட்சம் ஊதியம் மட்டுமே அளிக்கப்படுவதாகவும் ஊதிய உயர்வாக 1 சதவீதம் மட்டுமே உயர்த்தி வழங்கப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி வைரலானது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், இதற்கு காக்னிசன்ட் நிறுவனம்  விளக்கம் அளித்துள்ளது.

Continues below advertisement

இதுகுறித்து காக்னிசன்ட்  (Cognizant) அமெரிக்காஸ் பிரிவின் இவிபி மற்றும் தலைவரான சூர்யா கும்மாடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூறியதாவது:

’’புதிதாக பொறியியல் படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு 4 முதல் 12 லட்சம் ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் வெளியான ஊதிய விவரம், பொறியியல் அல்லாத இளநிலை கலை, அறிவியல் படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் ஆகும்.

Continues below advertisement

குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே..

அதேபோல 1 சதவீத ஊதிய உயர்வு என்பது, குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆண்டு ஊதிய உயர்வாக, அவர்களின் தனிப்பட்ட செயல் திறனின் அடிப்படையில் 1- 5 சதவீதம் வழங்கப்படுவது ஆகும்.

ஒவ்வொரு விதமான பணிக்கும் ஆண்டுதோறும் காக்னிசன்ட் நிறுவனம்  பொறியியல் பட்டதாரிகள் மற்றும் பொறியியல் அல்லாத ஐடி பட்டதாரிகளை வேலைக்கு எடுக்கிறது. இந்த இரண்டு விதமான ஆட்சேர்ப்புகளும் பெரும்பாலும் ஒரே நேரத்தில் நடைபெறும். அவ்வாறுதான் 2.52 லட்சம் ஊதியம் பெறும் ஃப்ரெஷ்ஷர்களின் விவரங்கள் வெளியாகின.

இளநிலை பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கானது

இது 3 ஆண்டு இளநிலை பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கானது. இவர்கள் பெரும்பாலும் நிர்வாகப் பணி மற்றும் பிற வேலைகளுக்காக பணி அமர்த்தப்படுகின்றனர். இவ்வாறு பணியில் சேரும் பலர் இன்று மேலாளர் முதல் துணைத் தலைவர் வரை பல்வேறு பதவிகளில் இணைந்துள்ளனர்.

புதிதாக பொறியியல் படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு, 4 முதல் 12 லட்சம் ரூபாய் வரை ஆண்டு ஊதியம் அளிக்கப்படுகிறது. இது ஆட்சேர்ப்பு வகை, திறமை மற்றும் நவீன தொழில்துறை அங்கீகார சான்றிதழ்கள் ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது.

பொறியியல் பட்டதாரிகளுக்கு நாங்கள் வழங்கும் ஆஃபர் என்பது சக ஐடி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, மிகவும் அதிகம் ஆகும். காக்னிசன்ட் நிறுவனம் ஊழியர்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கிறது’’.

இவ்வாறு சூர்யா கும்மாடி விளக்கம் அளித்துள்ளார்.