பாகிஸ்தானில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுவதால் உயர்நீதிமன்ற பியூன் வேலைக்கு 15 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.
பாகிஸ்தானில் வேலையில்லா திண்டாட்டம் 6.5 % இருப்பதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து இருந்தார். ஆனால், பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி நிறுவனமான (PIDE) நடத்திய ஆய்வு ஒன்றில் அந்நாட்டில் 16 சதவீதம் பேர் வேலை இல்லாமல் தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டில் தொடர்ந்து வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருவதாகவும், அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பாகிஸ்தானில் பட்டம் படித்தவர்களில் 24 சதவீதம் பேர் வேலை இன்றி தவிப்பதாக அந்நாட்டின் பிரபல பத்திரிகையான டான் தெரிவிக்கிறது.
அண்மையில் பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் ஒன்றில் புயூன் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், விருப்பம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுத்து இருந்தனர். இது குறித்த விளம்பரத்தை பார்த்த பலர் போட்டிப் போட்டுக் கொண்டு பியூன் வேலைக்காக விண்ணப்பித்தனர். இந்த பணிக்காக இதுவரை 15 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களில் M.Phil பட்டம் படித்த பலர் புயூன் வேலைக்கு விண்ணப்பித்து இருப்பது அந்நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தின் வீரியத்தை உணர வைத்து இருக்கிறது.
இது குறித்து ஆய்வு நடத்தி இருக்கும், பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி நிறுவனமான (PIDE) மேலும் தெரிவிக்கையில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்பை நிறைவு செய்த 40 சதவீதம் பேருக்கு பாகிஸ்தானில் வேலை இல்லை என கூறுகிறது. பாகிஸ்தானில் படித்த பலர் வேலை கிடைக்காமல் திண்டாடி வரும் நிலையில், M.Phil படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என எண்ணி அதற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
இதுபோன்ற தகவல்கள் புள்ளி விபரத்தில் சேர்க்கப்படவில்லை. இதையும் சேர்த்து கணக்கிட்டால் பாகிஸ்தானில் வேலையில்லாமல் தவிப்பவர்களின் சதவீதம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் அரசு, ஆராய்ச்சிகளில் ஆர்வம் காட்டாமல் உள்ளதாகவும், ஆராய்ச்சி மாணவர்கள் பலர் வெளிநாடுகளை நாடி செல்லும் நிலை உள்ளதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இயங்கி வரும் சில ஆராய்ச்சி கல்வி நிறுவனங்களும் மாணவர்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்வதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக உலகை வாட்டி வதைத்து வரும் கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பொருளாதார தாக்கம் பலரை வேலை இழக்க வைத்து இருக்கிறது. இதற்கு பாகிஸ்தான் மட்டும் விதிவிலக்கு அல்ல. அங்கு கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக 2 கோடி பேர் வேலை இழந்து உள்ளனர். உலகிலேயே அதிக மக்கள் தொகையில் 5 வது இடத்திலும், அதிக தொழிலாளர்களை கொண்ட நாடுகளில் 9 வது இடத்திலும் பாகிஸ்தான் உள்ளது.