திமுக ஆட்சி காலத்தில்‌ ஒன்றேகால் ஆண்டில் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


சென்னை, ராயப்பேட்டை, புதுக்கல்லூரியில்‌ தொழிலாளர்‌ நலன்‌ மற்றும்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ துறை சார்பில்‌ இன்று (15.10.2022)  மாபெரும்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. 


அதில் கலந்துகொண்டு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ பேசியதாவது:


’’தொழிலாளர்‌ மற்றும்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ துறையின்‌ சார்பில்‌ ஏராளமான பணிகள்‌ கடந்த பதினைந்து மாத காலத்தில்‌ செய்து தரப்பட்டுள்ளன.


* தொழிலாளர்‌ நல வாரியங்களில்‌ முந்தைய ஆட்சியாளர்களால்‌ தரப்படாமல்‌ நிலுவையில்‌ இருந்த 1 லட்சம்‌ மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள்‌ செய்து தரப்பட்டுள்ளது.


* திராவிட முன்னேற்ற ஆட்சி காலத்தில்‌ 6 லட்சத்து 71 ஆயிரம்‌ பேருக்கு நலத்திட்ட உதவிகள்‌ வழங்கப்பட்டுள்ளது.


* 25-க்கும்‌ மேற்பட்ட தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தினை நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


* 10 ஆயிரம்‌ தொழிலாளர்களுக்கு வீட்டுவசதித்‌ திட்டம்‌ அறிமுகம்‌ செய்யப்பட்டுள்ளது.


* புதிதாக 12 ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ உருவாக்கப்பட்டுள்ளன.


* 6 முதல்‌ 9 ஆம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ அமைப்பு சாரா தொழிலாளர்களின்‌ குழந்தைகளுக்கு ஆயிரம்‌ ரூபாய கல்வி உதவித்‌ தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவை போன்ற உதவித்‌ தொகைகள்‌ அனைத்தும்‌ உயர்த்தி வழங்கப்பட்டுள்ளன.


* கடந்த 15 மாதத்தில்‌ மட்டும்‌ தமிழ்நாட்டின்‌ பல்வேறு நகரங்களில்‌ பெரிய அளவில்‌ 65 வேலை வாய்ப்புப்‌ பயிற்சி முகாம்கள்‌ நடத்தப்பட்டுள்ளன. சிறிய அளவில்‌ 817 முகாம்கள்‌ நடத்தப்பட்டுள்ளன. 


* மொத்தமாகச்‌ சொல்வதாக இருந்தால்‌ 882 முகாம்கள்‌ நடத்தப்பட்டிருக்கிறது. அப்படி நடத்தப்பட்டிருக்கக்கூடிய அந்த முகாம்கள்‌ மூலமாக இத்துறையின்‌ ஆர்வத்தை நான்‌ பார்க்கிறபோது, இந்த முகாம்கள்‌ மூலம்‌ இதுவரைக்கும்‌ 15 ஆயிரத்து 691 நிறுவனங்கள்‌ பங்கெடுத்துள்ளன.


* இதுவரை நடந்த முகாம்களில்‌ 99 ஆயிரத்து 989 பேர்‌ பலவேறு வேலை வாய்ப்புகளைப்‌ பெற்றிருக்கிறார்கள்‌ என்ற மகிழ்ச்சியான செய்தியை இங்கே எல்லோரும்‌ தெரிவித்தார்கள்‌, அதைதான்‌ நானும்‌ வழிமொழிகிறேன்‌.


* பத்தாம்‌ வகுப்பு படித்தவர்கள்‌ முதல்‌ பொறியியல்‌ பட்டதாரிகள்‌ வரை வேலை வாய்ப்பை பெற்றுள்ளார்கள்‌. இப்படி வேலை வாய்ப்பைப்‌ பெற்றவர்களில்‌ மாற்றுத்திறனாளிகளும்‌,திருநங்கைகளும்‌ இருக்கிறார்கள்‌ என்பதுதான்‌ சமூக நீதி. இதுதான்‌ திராவிட மாடல்.


* ஒரு லட்சமாவது பணி ஆணையை வழங்கியது உள்ளபடியே சொல்கிறேன்‌, என்னுடைய வாழ்நாளில்‌ எத்தனையோ மறக்க முடியாத நிகழ்ச்சிகள்‌ எல்லாம்‌ உண்டு, அப்படிப்பட்ட வரிசையில்‌, உறுதியாக சொல்கிறேன்‌. இந்த ஒரு இலட்சமாவது பணி ஆணையை வழங்குவதும்‌ ஒரு நிகழ்ச்சியாக அமைந்திருக்கிறது என்பதை நான்‌ பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்‌.’’‌


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.