டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்விற்கு டாக்டர். அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி மையம்  கட்டணம் இல்லாமல் பயிற்சி அளிக்கிறது.

Continues below advertisement

TNPSC-யின் வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி  சார் - பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உட்பட பல்வேறுப்  பதவிகளுக்கான 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப் -2 மற்றும் குரூப் - 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

இதற்கான முதல்நிலைத் தேர்வு செப். 28 -ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத் தேர்விற்கு இணைய வழியில் விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் 13-ம் தேதி இறுதி நாளாகும்.

Continues below advertisement

முதன்மைத் தேர்வுகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒவ்வொருத் தேர்விற்கும் தேர்வு முறையில் மாற்றங்களை கொண்டு வரும் தேர்வாணையத்தின் உத்தியை உள்வாங்கி கொண்டு டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி மையம் தனது பயிற்றுவிக்கும் திறனை கூடுதலாக செம்மைப்படுத்திப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், TNPSC-ன் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்விற்கு கட்டணமில்லாமல் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். துறைசார்ந்த வல்லுனர்கள் மற்றும் பல்வேறுத் துறைகளில் பணிபுரியும் உயர்நிலை அலுவலர்களின் அனுபவங்களும் தேர்வில் வெற்றி பெற ஆலோசனைகளும் தேவைக்கேற்ப மாணவர்களிடம் அவ்வப்போது பகிரப்படும்.

டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி மையமானது, அகில இந்திய இன்ஷூரன்ஸ் ஊழியர் சங்கம், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் சங்கம், இந்திய மாணவர் சங்கம், சாலையோர வியாபாரிகள் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து மாணவர்களுக்கு கட்டணமில்லாமல் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும்  அம்பேத்கர் கல்வி மையத்துடன் இணைந்து மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவதை உறுதிபடுத்தி வருகின்றனர்.

யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?

வார இறுதி நாட்களில் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களும் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏனைய அனைத்துப் பிரிவு மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.

சென்னை -1, பாரிமுனை 6/9, அக்ரஹாரம் சந்து, (கச்சாலீஸ்வரர் கோயில்) அருகில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் இக்கல்வி மையம் அமைந்துள்ளது.

ஜூலை 20 முதல் வகுப்புகள்

இங்கு 20.07.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெறும்.

தேர்வெழுத முழுத் தகுதியுடைய மாணவர்கள் மட்டுமே இப்பயிற்சியில் கலந்து கொள்ள முடியும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுடைய அனைத்துப் பிரிவு மாணவர்களும் முன்பதிவு செய்வதுடன் கடவுச்சீட்டு அளவுப் புகைப்படத்துடன் குடியிருப்பு முகவரிக்கான ஆதார ஆவண நகலுடன் வர வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய கீழ்க்காணும் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.

63698 74318, 95243 18207, 97906 10961, 94446 41712