இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவும், உலகமும் வாக்கு வங்கியும் என்ன நினைக்கும் என்பது குறித்தும், நாம் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா?, வாக்கு வங்கி விலகிச் செல்லுமா?, என்பதை அடிப்படையாக கொண்டும், முடிவுகள் எடுக்கப்பட்டதாக பிரதமர் மோடி ஏபிபி 2047 உச்சி மாநாட்டில் தெரிவித்தார்.
ஏபிபி உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி:
ஏபிபி ( ABP Network ) குழுமத்தின் முக்கிய நிகழ்ச்சியான, 2047ல் இந்தியா என்ற தலைப்பிலான உச்சிமாநாடு இன்று நடைபெற்றது. இந்த உச்சி மாநாடானது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று ஒரு நாள் நடைபெற்றது. இந்த உச்சிமாநாடானது, இந்திய சுதந்திர நூற்றாண்டின் 2047 ஆம் ஆண்டிற்குள், இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான பாதை குறித்து ஆலோசிப்பதாக இருக்கிறது. இந்த மாநாட்டில் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரதமர் நரேந்திர மோடி கலந்த கொண்டார். பிரதமர் மோடி, 20247 ஆம் ஆண்டில் இந்தியா நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கான பாதை குறித்தும், அதற்கு எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் மற்றும் இந்தியாவின் தற்போதைய சூழல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இந்தியாவின் கனவு:
பிரதமர் மோடி பேசியதாவது, “ இந்தியாவின் மிகப்பெரிய கனவு 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதாகும். அதற்கான திறன்கள், வளங்கள் மற்றும் உறுதிப்பாடு இந்தியாவிடம் உள்ளது. இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தமானது ( Free Trade Agreement ) , இரு நாடுகளின் வளர்ச்சியிலும் ஒரு அத்தியாயத்தை ஏற்படுத்துகிறது. இது, இளைஞர்களுக்கு நல்ல செய்தியாகும். இது பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கத்தை அளிக்கும். இதன் மூலம் இந்திய வணிகங்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய பாதைகள் திறக்கப்படும்.
முதலில் தேசம்தான்:
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, பெரிய முடிவுகளை எடுக்கவும், பெரிய இலக்குகளை அடையவும் மற்றும் தேசிய நலனைப் பேணுவும், நாட்டின் திறன்களின் மீது நம்பிக்கை கொள்வது என்பது மிகவும் முக்கியம்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, பல தசாப்தங்களாக தேசத்திற்கு தீங்கு விளைவிக்கும் போக்கானது இருந்தது. முன்னர் எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவிற்கும், உலகமும் வாக்கு வங்கியும் என்ன நினைக்கும் என்றும், அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா?, வாக்கு வங்கி விலகிச் செல்லுமா? என சுயநல நலன்களுக்காக, பெரிய சீர்திருத்தங்கள் தாமதப்படுத்தப்பட்டன. குறிப்பாக முத்தலாக் ஒழிப்பு, வக்ஃபு திருத்த சட்டம் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை முந்தைய அரசாங்கமானது எடுக்கவில்லை என பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.
எந்த ஒரு நாடும், இந்த வழியில் முன்னேற முடியாது. ஒரு நாடு முன்னேற ஒரே வழி 'தேசம் முதலில்' என்பதைப் பின்பற்றுவதுதான் என பிரதமர் மோடி தெரிவித்தார்.