உலகளாவிய கோவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் உக்ரைனின் போர், சீனாவிடமிருந்து தைவான் எதிர்கொண்டு வரும் பனிப்போர் ஆகியவை ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்கி வருகிறது. இந்த கட்டுமானத்துக்கு இடையே இந்தியா அதன் மையத்தில் நுட்பமாக வைக்கப்பட்டுள்ளது. பிரிக்ஸ், எஸ்சிஓ, க்வாட் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் ஒருங்கிணையங்கள் இந்தியாவின் பங்கேற்பு இன்றியமையாததாக கருதப்படுகிறது.


இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளின் ஆரம்ப காலத்தில் ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவற்றால் பிரிக்ஸ் எழுப்பப்பட்டது, மேலும் இது அமெரிக்கா மற்றும் மேற்கு-தலைமையிலான நிதி நிர்வாகங்கள் மற்றும் பொருளாதார ஒழுங்கை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அந்த காலகட்டத்துக்குப் பிறகு, வெவ்வேறு பகுதிகளில் சீனாவின் ஆக்கிரமிப்பு காரணமாக இந்திய தேசிய நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு நான்கு நாடுகளைக் கொண்ட QUADல் வசதியாக தன்னை இணைத்துக் கொண்டது. ஆனால் அமெரிக்கா ரஷ்யா இடையேயான பனிப்போர் கால அணிசேராமை போல இல்லாமல்,இந்த புதிய உலக ஒழுங்கில் அதிக பரிவர்த்தனை மற்றும் தேசிய முன்னுரிமைகளால் இயக்கப்படும்.



பனிப்போரின் முடிவு சர்வதேச நாடுகளுடனான தனது உறவை வலுப்படுத்திக்கொள்ள இந்தியாவுக்கு உதவியாக அமைந்தது, 10 உறுப்பினர்களைக் கொண்ட ஆசியான் முதல் 28 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், மத்திய ஆசியா முதல் வளைகுடா வரை  இன்னும் சொல்லப் போனால் ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கப் பொருளாதாரக் குழுவான MERCOSUR வரை தன்னை ஒரு அங்கமாக ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளது. எஞ்சியிருக்கும் ஒரே வல்லரசான அமெரிக்காவுடன் உறவைப் பேணும் அதே சமயம் ரஷ்யாவுடனான உறவையும் ஒரே நேரத்தில் பராமரிக்கிறது.


இந்தியாவின் பொருளாதார ஆற்றலை உணர்ந்தும்  அது மேற்கத்திய தொழில்நுட்பம், உபகரணங்கள் மற்றும் தயாரிப்புகளுக்கான மிகப்பெரிய வளர்ந்து வரும் சந்தையாக உருவாகி வருவதையும் உணர்ந்து அதனுடனான அரசியல் ரீதியான உறவைத் தொடங்க அமெரிக்கா ஒரு பெரிய நடவடிக்கை எடுத்தது. தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே,  சோவியத் யூனியனுடனான இந்தியாவின் உறவைப் புறந்தள்ளிவிட்டு அமெரிக்கா இந்தியாவுடன் ‘மலபார்’ என்னும் கூட்டுக் கடற்படைப் பயிற்சியைத் தொடங்கியது. 1992ல் மலபார் கடல்சார் முன்முயற்சி இப்போது நான்கு நாடுகளின் இந்தோ-பசிபிக் நாற்கரக் குழுவாக மலர்ந்துள்ளது, அதாவது இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றை உள்ளடக்கிய QUAD குழுவாக உருவாகியுள்ளது. இது சீனாவின் ஆக்கிரமிப்பு மற்றும் விரிவாக்கக் கொள்கைகளை அதிகாரப்பூர்வமற்ற முறையில் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.




அணிசேரா காலத்திலிருந்து   SCO, BRICS, QUAD , I2U2 என தற்போதைய இருதரப்பு உதவிக்கான கூட்டணிகள் வரை இந்தியா அதன் தேசிய பொருளாதார மற்றும் மூலோபாய நோக்கங்களை அடையும் வகையில் புத்திசாலித்தனமாக வடிவமைத்துள்ளது.


கொரோனாவுக்குப் பிந்தைய உலகம் உலகளாவிய மறுசீரமைப்பு செயல்முறையை துரிதப்படுத்தியுள்ளது. இந்த வேகமாக மாறிவரும் புவிசார் அரசியல் சூழ்நிலையில், இந்தியா ஒருபுறம் அமெரிக்கா-ஜப்பான்-ஐரோப்பா-ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் முகாமாகவும் மற்றொரு புறம் ரஷ்யா-சீனா போன்ற நாடுகளுக்கான தவிர்க்கமுடியாத அங்கமாகவும் உருவெடுத்துள்ளது.




21 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில், இந்தியா ரஷ்யா மற்றும் சீனாவுடன் உலக அரங்கில் தன்னை நெருக்கமாக்கிக் கொண்டது. அதே நேரத்தில் அமெரிக்காவுடனான அதன் மூலோபாய ஈடுபாட்டை ஆழமாக்கியது. இதன் விளைவாக, 2008ல் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் இந்தியா அணுசக்தி நாடுகளில் தனிமைப்படுத்தப்படுவதை முடிவுக்குக் கொண்டு வந்தது. இது இந்தியாவை அணுசக்தி குழுக்களின் உயர் மேசையில் வைத்தது.


பிரிக்ஸ் குழு அமெரிக்கா மற்றும் மேற்கு-தலைமையிலான நிதி மற்றும் பொருளாதார மேலாதிக்கத்தை சவால் செய்ய நினைத்தாலும் அது அமெரிக்கா ஜப்பான் ஐரோப்பாவுடனான அதன் உறவை பாதிக்கவில்லை. மாறாக அதன் உறவைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றது.


இருப்பினும், தென் சீனக் கடல் மற்றும் சீன-இந்திய எல்லைகளில் சீனாவின் ஆக்ரோஷமான செயல்பாடுகள், பிரிக்ஸ் உடன் மிக நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்க இந்தியாவுக்கான அலாரமாக இருந்தது. இதனால் பிரிக்ஸில், இந்தியா-சீனாவின் போட்டி பிளவுகளை உருவாக்கியது. 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் இருந்து பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா தீவிரமாக பங்கேற்றாலும், அதே நேரத்தில் அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பா, ஆசியான் ஆகியவற்றுடன் அதன் பாதுகாப்பு  ஈடுபாட்டை ஆழமாக்கியது. இந்தியா அமெரிக்காவுடன் மட்டுமின்றி ஐரோப்பாவில் உள்ள பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற அதன் நட்பு நாடுகளுடனும், ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற கிழக்கு ஆசிய பொருளாதார சக்திகளுடனும்  கூட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.


நாடுகளின் போட்டிக் குழுக்கள் தங்கள் முகாமில் இந்தியாவுடன் பங்கேற்கத் தொடர்ந்து முயன்றன, ஆனால் இந்தியா எதிர்க்கும் நாடுகளுடன் அவை தனது உறவுகளை சாமர்த்தியமாக சூழ்ச்சி செய்து சமநிலைப்படுத்தின.


தேசிய நலனுக்கான உலகளாவிய மறுசீரமைப்பு


பிப்ரவரி 2022 இல், உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்தபோது இந்தியாவுக்கென மிகப்பெரிய சோதனை ஏற்பட்டது. இதன் போது அமெரிக்கா, இந்தியாவின் கூட்டு நாடுகளான குவாட் போன்ற குழுக்களில்  ரஷ்யாவின் செயலைக் கண்டிக்கும் என்று எதிர்பார்த்தது.


ஒரு நடுநிலை நிலைப்பாட்டை எடுத்த இந்தியா, உக்ரைனின் இறையாண்மையை ஆதரிக்கும் அதே வேளையில், ரஷ்யாவுடனான தனது உறவை தியாகம் செய்ய முடியாது என்று கூறியது. இக்கட்டான காலங்களில் இந்தியாவுடன் ரஷ்யா நின்றது மற்றும் சீனா-பாகிஸ்தான் சவாலை எதிர்கொள்ள ரஷ்ய ஆயுதங்களை இந்தியா சார்ந்துள்ளதும் காரணமாகக் கூறப்பட்டது.


ரஷ்யாவுடனான தனது 5.4 பில்லியன் டாலர் S-400 ஏவுகணை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு  தெரிவித்தபோதிலும்,  ஐ2யு2 குழுவில் இந்தியாவை ஈடுபடுத்துவதில் அமெரிக்கா குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. இது மேற்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தியா மேலாதிக்கப் பங்கு வகிக்க உதவும். இந்த புதிய குழுவானது இஸ்லாமிய நாடுகளின் விவகாரங்களில் சீனாவின் அதிகப்படியான தலையீட்டைத் தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உலக ஒழுங்கு மறுவடிவமைக்கப்படுவதால், இந்தியா QUAD மற்றும் I2U2 இன் உறுப்பினராக தனக்கென ஒரு வசதியான நிலையைக் கண்டறிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது, இது பாகிஸ்தானின் அரச ஆதரவு பயங்கரவாதத்தின் இரட்டை சவாலையும் தென் சீனாவில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் சமாளிக்க உதவும். தைவான் மீதான தனது கட்டுப்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான சீனாவின் முயற்சியை அமெரிக்கா எதிர்கொள்ள மற்றும் அதன் விளைவுகளைச் சமாளிக்க அனைத்து நாடுகளும் அணிதிரளும் நிலையில் QUAD  போன்ற சர்வதேச் நாடுகளின் ஒருங்கிணைப்பில் அமெரிக்காவின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.


இந்த புதிய உலக ஒழுங்கு பனிப்போர் கால பவர் டைனமிக்ஸை பின்பற்றுவதாகத் தெரிகிறது, ஆனால் இது அன்றைய கருத்தியல் அடிப்படையிலான சமன்பாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்தியா தனது தேசிய நலனை முன்னேற்றுவதற்கு இந்த நிச்சயமற்ற மற்றும் ஏற்ற இறக்கமான பாதையில் கவனமாக செல்ல வேண்டும். சர்வதேச உறவுகளில் நிரந்தர நண்பனோ நிரந்தர எதிரியோ இல்லை. தேசிய நலன் மட்டுமே நிரந்தரமானது. அதன் வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் கவர்ச்சிகரமான மிகப்பெரிய நடுத்தர வர்க்க சந்தை, இராணுவ வலிமை ஆகியவற்றுடன், இந்தியா தனது தேசிய நலன்களை போதுமான அளவு கவனித்து, உலகம் முழுவதும் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.