இலங்கை நாட்டில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி அச்சுறுத்தி வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் மின்சார கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி எப்படி உருவானது? தற்போது புதிய அதிபராக பதவியேற்றுள்ள விக்ரமசிங்க செய்ய வேண்டியது என்ன?
ஈஸ்டர் தாக்குதல் டூ பொருளாதார நெருக்கடி வரை:
இலங்கையில் பொருளாதார நெருக்கடி திடீரென்று தொடங்கியதல்ல. இது பல மாதங்களாக தொடர்ந்து வந்தது. குறிப்பாக 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதன்காரணமாக அப்போது முதல் அங்கு சுற்றுலா மிகவும் தடைப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததன் காரணமாக அந்நிய செலாவணி அங்கு மிகவும் குறைந்தது. அத்துடன் அங்கு பலருக்கு வேலைவாய்ப்பு பறிபோனது. இது இலங்கை பொருளாதாரத்தில் விழுந்த முதல் அடி.
இதைத் தொடர்ந்து இலங்கை அரசு ஒரு கொள்கை முடிவை எடுத்தது. அதில் ரசாயனம் மற்றும் உரம் ஆகியவற்றின் இறக்குமதியை இலங்கை அரசு தடை செய்தது. அதாவது இயற்கை வேளாண்மையை அதிகரிக்க இலங்கை அரசு இந்த முடிவை எடுத்தது. இதன்காரணமாக 6 மாதங்களில் அங்கு பயிர்களின் உற்பத்தி மிகவும் பாதிப்பிற்கு உள்ளானது. குறிப்பாக இலங்கைக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் தேயிலை பயிர்களின் உற்பத்தியும் குறையத் தொடங்கியது.
இந்த சிக்கல்களை தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று காரணமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு அடுத்த அடி விழுந்தது. மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது. கொரோனா காரணமாக மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை போல் இலங்கையின் பொருளாதாரம் மேலும் சரிந்தது. உணவு, எரிப்பொருள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை வேகமாக உயர்ந்தது. இந்த விலைவாசி உயர்விற்கு ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி ஒரு காரணம் என்று கருதி மக்கள் போராடத்தில் குதித்தனர். அது பெரிய மக்கள் போராட்டமாக மாறியது. அதிபர் மாளிகை முதல் அனைத்து அமைச்சர்களின் இல்லங்களும் முற்றுகையிட்டு சூறையாடப்பட்டன.
ரணில் விக்ரமசிங்க செய்ய வேண்டியது என்ன?
தற்போது இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார். இலங்கை நாடு தற்போது வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் உள்ளது. மேலும் இலங்கை சர்வதேச நிதியத்திடம் இருந்து 3 பில்லியன் டாலர் கடனை கேட்டுள்ளது. அது கிடைப்பதில் தற்போது தாமதம் நிலவி வருகிறது.
அத்துடன் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடும் மிகவும் வேகமாக அதிகரித்துள்ளது. இதையும் சரி செய்ய வேண்டிய முக்கிய பொறுப்பு அதிபர் விக்ரமசிங்கவிற்கு உள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியுடன் ரணில் விக்ரமசிங்க மக்களின் அதிருப்தியையும் சேர்ந்து சரி செய்ய வேண்டிய நிலையில் உள்ளார். ஆகவே இது அவருக்கு சற்று சவாலான சூழல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதியவர் சுமித் பாண்டே. இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் கருத்துகளாகும். இதற்கும் ஏபிபி நாடுவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்