இஸ்ரோ என்றழைக்கப்படும் "இந்திய விண்வெளி ஆய்வு மையம்' (The Indian Space Research Organisation (ISRO)) உலகின் மிகப் பெரிய விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. இது ஆகஸ்டு,15, 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தொலைத்தொடர்பு சேவைகளுக்கு செயற்கைக் கோள்களே (ARTIFICIAL SATELLITES) ஆதாரமாக உள்ளது.


நம் நாடு விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தொடங்கியது 1920களில்தான்.  சிசிர் குமார் மித்ரா என்பவர் இதற்கு காரணமாய் அமைந்தார்.  சர்.சி.வி.ராமன், மேக்நாத் சாகா உள்ளிட்டோர் தனிப்பட்ட முறையில், விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு  1945-ஆம் ஆண்டுக்குப் பிறகு இம்முயற்சிகள் ஒருங்கிணைக்கிப்பட்டன.  இந்திய விண்வெளி ஆய்வுகளின் தந்தை என்றழைக்கப்படும் ‘விக்ரம் சாராபாய்' மற்றும் ’ஹோமி ஜஹாங்கீர் பாபா' இருவரின் தலைமையில் ஆய்வு மையங்கள் தொடங்கப்பட்டு, விண்வெளி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 


பின்னர், 1962 - இல் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆதரவுடன் விக்ரம் சாராபாய் தலைமையில் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக்கான குழு (National Committee for Space Research (INCOSPAR) ) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் பிறகு இந்தியாவில் நடைபெற்ற விண்வெளி ஆராய்ச்சிகள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. 


இஸ்ரோவின் பல்வேறு பணிகளுக்காகவும், ஆராய்ச்சிகளுக்காகவும் பெங்களூரு, திருவனந்தபுரம், டெல்லி, ஸ்ரீஹரிகோட்டா, மகேந்திரகிரி  உட்பட 21 இடங்களில் இஸ்ரோ மையங்கள் உள்ளது. இஸ்ரோவின் எதிர்கால விண்வெளி திட்டங்கள் என்னென்ன என்பது குறிப்பது இக்கட்டுரையில் காண்போம். இஸ்ரோ தலைவராக கே.சிவன் (Kailasavadivoo Sivan) பொறுப்பு வகிக்கிறார்.



இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள்:


ஆதித்யா - L1 (Aditya-L1)


ஆதித்யா-L1 சூரியன் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வடிவமைக்கப்படும் இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வுக்கலம். 400 கிலோ கிராம் செயற்கை கோள் சூரியனின் மூன்று அடுக்குகளை ஆய்வு செய்ய   SUIT (Solar Ultraviolet Imaging Telescope) எனப்படும் சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கி பூமியிலிருந்து 1.5 மில்லியன் கி.மீ தூரத்தில் நிறுவப்பபடும். 


சூரியனின் வெளிப்புற வளிமண்டலம், சூரிய ஒளிக்கதிர், குரோமோஸ்பியர் உள்ளிட்டவைகள் குறித்து ஆதித்யா - L1 ஆய்வு செய்ய உள்ளது. சூரியனின் வெப்பம் மற்றும் வெப்ப அடுக்குகள் பற்றி தெளிவாக அறிய இது வகை செய்யும். சூரியனில் நிகழும் மாற்றங்களை தெரிந்துகொள்ள பயன்படும்  ஆதித்யா - L1 இந்த ஆண்டு இறுதியில் விண்ணில் ஏவப்பட திட்டமிடப்பட்டுள்ளது.



 


சந்திரயான் - 3 (Chandrayaan-3) 




நிலவில் தண்ணீர் இருப்பதை உறக்கச் சொன்னது சந்திராயன் விண்கலம். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் 2019 ஜூலை 22-ல் ஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக செப்டம்பர்,7-ஆம் தேதி சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் கலன் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கவில்லை.


இந்நிலையில், சந்திரயான் - 3 திட்டம் சந்திராயன் -2- மிஷனின் ரிப்பீட் என்று கூறப்பட்டுள்ளது. சந்திரயான் - 3 விண்கலத்தில் ஆர்பிட்டர் இருக்காது. சந்திராயன் - 3 இம்மாதம் விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தெரிந்து கொள்க!



  • ஆர்பிட்டர் என்பது விண்வெளியில் உள்ள  கோள்களைச் சுற்றி வந்துகொண்டே ஆய்வு செய்யும்.

  • லேண்டர்- உதாரணத்திற்கு நிலவில் பத்திரமாக தரையிறங்கி தன் ஆய்வை மேற்கொள்ளும்.

  • ரோவர்- இது ஆய்வு செய்யப்பட வேண்டிய கோள்/ கிரகத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று ஆய்வு செய்யும் திறன் கொண்டது.




ககன்யான்- 1 (Gaganyaan 1)


இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் கனவு திட்டம் ‘ககன்யான்’. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இந்தத் திட்டத்திற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ தீவிரமாக செய்து வருகிறது. இதன் மூலம் புவியின் குறைந்த அடுக்குகளில் சுற்றுப்பாதைக்கு (low-Earth orbit,)மனிதனை அனுப்புவது சாத்தியமாகும்.  ககன்யான் திட்டம் மூலம் தனித்துவமான ஏவுகணைகளை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இது இரண்டு முறையாக செயல்படுத்தப்படுத்தப்படுகிறது. இரண்டு ஆளில்லா விண்கலன்கள் மற்றும் மனிதனுடன் செல்லும் விண்கலன் என்று இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட இருக்கிறது. ஆளில்லா ஏவுகணைகளை பரிசோதித்த பின்னர், விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று மனிதர்களை தாங்கி செல்லும் அளவு கொண்டககன்யான் விண்கலன் இந்தாண்டு இறுதியில் விண்ணில் ஏவப்பட உள்ளது. 





ககன்யான் - 2 (Gaganyaan 2)


ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு ஆளில்லா விண்கலன் மூலம் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக விண்ணுக்குச் செலுத்தப்படும் ஆளில்லா விண்கலத்தில் ‘வியோமா மித்ரா’(Vyommitra) எனப்படும் பெண் ரோபோவும் பயணம் செய்ய இருக்கிறது. 


விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தப் பரிசோதனை முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டு இறுதிக்குள் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. 






இந்தத் திட்டத்திற்கான  கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை (Geosynchronous Satellite Launch Vehicle) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இது மேலும் நான்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.




 

2023-ஆம் ஆண்டு ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு மத்திய அரசு தெரிவித்திருந்தது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளை தொடா்ந்து  நான்காவது நாடாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை இந்தியா செயல்படுத்தப்பட உள்ளது பெருமையானது.





 


ககன்யான் -3 (Gaganyaan 3)


ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு மனிதை அனுப்பும் திட்டம் வரும் 2023 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் பயணிக்கும் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. விண்வெளி வீரர்கள் பல்வேறு பரிசோதனைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.  






நிசார் செயற்கைக் கோள் (NISAR)



புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ரேடார் படங்கள் மூலம் இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறிய வழிவகை செய்யும் புதிய செயற்கைக் கோளான நிசார் (NASA-ISRO Synthetic Aperture Radar (NISAR)) இந்தியாவின் இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாசா இணைந்து தயாரித்து வருகிறது. 



Synthetic Aperture Radar என்ற செயற்கைக் கோள் மூலம்  L-band and S-band அளவீடுகளிம் அடிப்படையில் பூமியில் ஏற்படும் நிலநடுக்கம், கடல்மட்டம் அதிகரிப்பு, எரிமலை சீற்றம், உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிய முடியும். இந்த ஆய்வின் மூலம் விண்வெளி ஆராய்சியாளர்கள் பருவநிலை மாற்றம் குறித்தும் இன்னும் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். இந்தத் திட்டம் 2023 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 





 


சுக்ரயான்-1 (Shukrayaan-1)


 வெள்ளி கோள் பற்றி ஆய்வு செய்ய இஸ்ரோ சுக்ரயான்-1 என்னும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. பூமி மற்றும் வெள்ளி இரண்டும் அளவு, நிறை, அடர்த்தி உள்ளிட்டவற்றில் சில ஒற்றுமைகளை கொண்டிருக்கின்றன.


 சுக்ரயான்-1 விண்கலம் விண்ணில் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து வெள்ளியைச் சுற்றிவரும். இதன் மூலம் வெள்ளி கோளின் வளிமண்டலம் உள்ளிட்ட பலவற்றை ஆராய உள்ளது. இது அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்பட இருக்கிறது. 


மங்கள்யான் - 2  (Mangalyaan-2)


சிவப்பு கோள் என்றழைக்கப்படும் செவ்வாய கிரகத்தின் வளிமணடல்ம், மே.ற்பரப்பு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள மங்கள்யான் -2 செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. மேலும், புவியியல், உயிரியல் துறைகள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் தீர்வுகாண மங்கள்யான் - 2 முயலும். ஆர்பிட்டர் மட்டுமல்லாது, செவ்வாய் கோளில் லேண்டர் மற்றும் ரோவரை தரையிறக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


அஸ்ட்ரோசாட்-2 (AstroSat-2)


 விண்வெளியில் உள்ள உள்ள புற ஊதாக்கதிர்கள்,  நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்ய இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘அஸ்ட்ரோசாட்’ செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 2015 செப். 28-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.


அதன் தொடர்ச்சியாக அஸ்ட்ரோசாட்-2 செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட திட்டமிடப்பட்டுள்ளது.