உத்தரகாண்ட் மாநிலத்தில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்த சாலையில் திடீரென ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். இதில், கார், இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளது. திடீரென ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அலறியடித்துகாெண்டும் ஓடும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதற்கான முழு விவரம் வெளியாகியுள்ளது. 

உயிர் தப்பிய பயணிகள்

உத்தரகாண்டின் சிர்சி நகரில் இருந்து கேதர்நாத் கோயிலுக்கு சென்றுகாெண்டிருந்த ஹெலிகாப்டர் ருத்ரபிரயாக்கில் சாலையில் தரையிறங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. 

தொடரும் விபத்து

கேதார்நாத் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துகள் அதிகம் நடந்து வருகிறது. கடந்த மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் நூலிழையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது . மேலும் ஹெலிகாப்டருக்குள் இருந்த நோயாளிகள் 3 பேர், டாக்டர், விமானி என மொத்தம் 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மரணம்

கடந்த மாதம் 8ஆம் தேதி உத்தரகாசி மாவட்டத்தில் கங்கோத்ரி நேக்கிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்தார். இதேபோன்று அடுத்தடுத்து நடக்கும் ஹெலிகாப்டர் விபத்துக்களால் உத்தரகாண்ட் மாநில மக்கள் கலக்கத்துடனேயே இருக்கின்றனர். ஆனால், இன்று பிற்பகல் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென சாலையில் தரையிறக்கப்பட்ட செய்திதான் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. அப்பகுதி மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போனதாக தெரிவித்துள்ளனர்.