சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோய் உலகம் முழுவதும் வளர்ந்து வரும் நோயாக இருக்கிறது. மேலும், பலரின் உணவுப் பழக்கம், மன அழுத்தம் முதலானவற்றின் காரணமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 40 வயதுக்கு மேற்பட்டோரிடம் அதிகம் காணப்பட்ட நீரிழிவு நோய் தற்போது அனைத்து வயதினரிடையிலும் பரவும் அபாயம் பெருகியுள்ளது. 


இந்தியாவில் தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 77 மில்லியனாகவும், உலகளவில் இரண்டாம் இடத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. உடலில் இன்சுலின் சுரப்பி தேவையான அளவு சுரக்கவில்லை என்றாலோ, சுரந்த இன்சுலின் சரிவரப் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ, நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இது இரண்டு வகைகளாக உள்ளது. முதல் வகையில், உடலின் இன்சுலின் சுரக்காமல் இருப்பது ஏற்படுகிறது. இரண்டாம் வகையில், சுரக்கப்பட்ட இன்சுலின் உடலுக்குப் பயன்படாம இருப்பது ஏற்படுகிறது. 


நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது சற்றே கடினம் என்ற போது, அதனைக் கட்டுப்படுத்தாமல் விடுவது இதய நோய், சிறுநீரக நோய்கள் முதலானவற்றை ஏற்படுத்தும் மேலும், நீரிழிவு நோய் தொடர்பான பொய்கள் உலகம் முழுவதும் பரப்பப்படுவதால் அவற்றை எதிர்கொள்வது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. எனவே, நீரிழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நவம்பர் 14 அன்று சர்வதேச நீரிழிவு நோய் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 



நீரிழிவு நோய் குறித்து பரப்பப்படும் பொய்களும், அவற்றின் உண்மைத் தன்மையும்!


பொய் 1: நீரிழிவு நோய் இனிப்பான பொருள்களையோ, சர்க்கரையையோ உண்பதால் ஏற்படுகிறது.


உண்மை: வாழ்க்கை முறை, மரபு சார்ந்த தொடர்ச்சி முதலானவற்றால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. 


பொய் 2: நீரிழிவு நோய் வயதானவர்களுக்கு ஏற்படுவது. அது குழந்தைகளையோ, இளைஞர்களையோ தாக்காது. 


உண்மை: முதல் வகை நீரிழிவு நோய் குழந்தைகளிடம் கூட காணப்படும். இரண்டாம் வகை நீரிழிவு நோய் குழந்தைகள், இளைஞர்கள் ஆகிய தரப்புகளிடம் அபாயகர எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது. 


பொய் 3: பிற மருத்துவ முறைகளால் நீரிழிவு நோயைக் குணப்படுத்த முடியும். 


உண்மை: நீரிழிவு நோய் நீண்ட காலத்திற்கு உடலில் இருப்பதால், பல நோயாளிகள் பிற மருத்துவ முறைகளை நாடி அதனைக் குணப்படுத்த முயல்கின்றனர். இவ்வாறு செய்வதால், உடலில் சர்க்கரை அளவுகள் கட்டுப்படுத்தப்படாமல், உயிருக்கே ஆபத்தான நிலைமைகளும் உருவாகலாம். எனவே உணவுப் பழக்கம், சில அறுவை சிகிச்சைகள் முதலானவற்றின் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம். எனினும், முழுவதுமாக குணப்படுத்த முடியாது. 



பொய் 4: இன்சுலின் ஊசி செலுத்துவோருக்கு, நீரிழிவு நோய் அதீதமாக உள்ளது. 


உண்மை: வெவ்வேறு உடல் காரணங்களுக்காக இன்சுலின் ஊசி பரிந்துரைக்கப்படுகிறது. உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் இன்சுலின் ஊசி பரிந்துரைக்கப்படுகிறது. இதற்கும் நோயின் அளவுக்கும் தொடர்பு இல்லை. 


பொய் 5: ஒரு நேர உணவைத் தவிர்த்தால் உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும். 


உண்மை: இது தவறான அணுகுமுறை. உடலில் கார்போஹைட்ரேட் சத்துகளைக் கட்டுப்படுத்தி, சரியான டயட் உணவைப் பின்பற்றுவதே சரியான அணுகுமுறை. 


பொய் 6: உடலில் சர்க்கரை அளவுகள் பல ஆண்டுகளாக அதிகம் உள்ள போதும், எனக்கு பக்க விளைவுகள் எதுவும் இல்லை. 


உண்மை: நீரிழிவு நோயைப் பொருத்தவரை, அது அதிதீவிரமாக மாறும் வரையில், சிலருக்கு எந்தப் பக்க விளைவையும் ஏற்படுத்தாது. விரைவில் உடலில் சர்க்கரை அளவைக் கண்டுகொள்ளுதல், அதற்கேற்ற டயட்டைப் பின்பற்றுதல் ஆகியவை இதயம், சிறுநீரகம், கண்கள் முதலான உறுப்புகளைப் பாதுகாக்கும். 



பொய் 7: எனது எடை அளவுக்கு அதிகமாக இருக்கிறது; எனினு அதற்கும் எனது நீரிழிவு நோய்க்கும் தொடர்பு இல்லை. 


உண்மை: எடையைக் கட்டுப்படுத்துவது என்பது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய இடம் வகிக்கிறது. நீரிழிவு நோய்க்கான சில மருந்துகள் எடையை அதிகரிக்கும் திறன் கொண்டவை; சில மருந்துகள் உடல் எடையைக் குறைக்கக் கூடியவை. எடை குறைக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம், இதயம், சிறுநீரகம் ஆகிய நோய்களில் இருந்து தப்பிக்கலாம். 


பொய் 8: என் உடலில் சர்க்கரை அளவுகள் நீண்ட நாள்களாகக் கட்டுப்பாட்டில் இருப்பதால், எனக்கு மருந்துகள் தேவையில்லை. 


உண்மை: சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்பட்டவுடன், மருந்துகளை நிறுத்தும் போக்கு பலரிடம் இருக்கிறது. மருந்துகள் நிறுத்தப்பட்டவுடன் சர்க்கரை அளவு மீண்டும் அதிகரிக்கிறது என்பது உண்மை. 


பொய் 9: காலை நடைபயிற்சி, சரியான டயட் ஆகியவை பின்பற்றப்பட்ட போதும், உடலில் சர்க்கரை அளவு அதிகமாகவே இருக்கிறது.


உண்மை: அதிக சர்க்கரை அளவு உள்ளவர்கள் எடைதூக்கும் பயிற்சி முதலானவற்றை வியர்வை வரும் அளவுக்கு சுமார் 45 நிமிடங்களுக்கு வாரத்தில் 6 நாள்கள் செய்ய வேண்டும். இதுவே அதிக சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். 


பொய் 10: என் சர்க்கரை அளவுகள் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவற்றை அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டியது இல்லை. 


உண்மை: நீரிழிவு நோய் என்பது படிப்படியாக முன்னேறும் தன்மையைக் கொண்டது. எனவே குறைந்தபட்சம் 60 நாள்களுக்கு ஒருமுறையாவது சர்க்கரை அளவுகளைப் பரிசோதிக்க வேண்டும். இதன்மூலம், சிறுநீரக நோய், கண் பார்வைக் குறைபாடு, இதய நோய் முதலானவற்றைத் தடுக்கலாம்.