பிராய்லர் கறியைத் தொடர்ந்து அடிக்கடி சாப்பிட்டால் பெண் குழந்தைகள் சீக்கிரமே பூப்பெய்திவிடுவர் என்று கூறப்படும் தகவலில் எள்ளளவும் உண்மையில்லை என்று பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறி உள்ளதாவது:
சிக்கனைப் பொறுத்தவரை தற்காலத்தில் பெரும்பான்மையினரால் நுகரப்படுவது "பண்ணைக் கோழி" என்றழைக்கப்படும் பிராய்லர் வகை கோழியினம். இது நன்றாக கொழு கொழுவென வளரும் ஒட்டு வகை இனமாகும்.
குறுகிய காலத்தில் ஊட்டச்சத்துள்ள தீவனங்களை சாப்பிட்டு உடல் உழைப்பு இல்லாமல் தொற்று அச்சுறுத்தல் குறைவான பாதுகாப்பான சூழ்நிலையில் வளர்க்கப்படுவதால் விரைவில் எடை கூடுகின்றன.
தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்துகள்
எப்படி மனிதக் குழந்தைகளுக்கு அபாயகரமான உயிர்க்கொல்லித் தொற்றுகள் ஏற்படாவண்ணம் தடுக்க தடுப்பூசிகள் பிரயோகிக்கப்படுகின்றனவோ அதுபோலவே பண்ணையில் அளவில் சிறிய இடத்தில் அதிகமான நெருக்கடியில் வளர்க்கப்படுவதால் தொற்றுப் பரவல் கொத்துக் கொத்தாக கோழிகளைக் கொல்லக் கூடும் என்பதால் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன.
அவை நன்றாக கொழு கொழுவென வளர்வதற்கு ஹார்மோன் ஊசி போடப்படுகின்றன என்பது உண்மைக்குப் புறம்பான செய்தியாகும். வளர்ச்சி ஊக்குவிப்பான்கள் மற்றும் ஆண்டிபயாடிக்குகள் ஆகியவை ஹார்மோன்கள் அல்ல.
பலரும் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடிய விஷயம் - இந்த ப்ராய்லர் கோழிகள் ஹார்மோன் ஊசி போட்டு கொழு கொழுவென்று ஆகின்றன என்பதாகும்.
இதையும் வாசிக்கலாம்: NEET UG 2026: நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்ய முடியாமல் மாணவர்கள் அவதி- மாற்று வழிகள் என்னென்ன?
கலப்பு செய்து உருவாக்கப்பட்ட பிராய்லர் இனம்
நான் முன்னமே கூறியதுபோல நன்றாக கொழு கொழுவென வளரும். நாட்டுக் கோழி இனத்திற்கும் தொற்றுகளை தாங்கி எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட இனத்திற்கும் கலப்பு செய்து உருவாக்கப்பட்டவையே பிராய்லர் இனம்.
விவசாயத்தில் பல்வேறு புரட்சிகள்
நம் நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப உணவுத் தட்டுப்பாட்டை சரிசெய்யவும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் விவசாயத்தில் பல்வேறு புரட்சிகள் செய்யப்பட்டன.
பயிர் விவசாயத்தில் பசுமைப் புரட்சி (GREEN REVOLUTION)
பால் விவசாயத்தில் வெண்மைப் புரட்சி ( WHITE REVOLUTION)
மீன் விவசாயத்தில் நீலப் புரட்சி ( BLUE REVOLUTION) போல
பறவை மற்றும் கால்நடை விவசாயத்தில் இளஞ்சிவப்பு புரட்சி (PINK REVOLUTION) நடந்து நமக்கான உணவுத் தேவை பூர்த்தியானது.
பாகுபாடின்றி எளிதில் நுகர முடிவதில்லை
இன்றும் எளியவர் பணம் படைத்தோர் பாகுபாடின்றி நுகரும் மாமிசமாக "கோழிக்கறி" இருந்து வருகிறது. கால்நடை மாமிசத்தை இங்கு அனைவராலும் பாகுபாடின்றி எளிதில் நுகர முடிவதில்லை.
அனைவரும் வாரம் ஒருமுறையேனும் உண்ணக்கூடிய கோழிக்கறி மீது தேவையற்ற அவதூறுகள் பரவும் போது ஏற்கனவே தேவையான புரதம் கிடைக்காத ஏழை எளியோர் "முட்டை மற்றும் கோழிக்கறியை" தவிர்க்கும் நிலைக்குச் செல்கின்றனர்.
நம் மாநிலத்தின் சிறுமியர் 9 முதல் 14 வயதுக்குள்தான் தற்போதும் சராசரியாக பூப்பெய்தி வருகின்றனர். இது கடந்த இருபது முப்பது ஆண்டுகளாக பெரிய மாற்றங்கள் இன்றியே தொடர்ந்து வருகிறது.
இது இயற்கையே
எனினும் முந்தைய தலைமுறையை விட தற்கால சிறுமியருக்கு ஆரம்பம் முதலே நல்ல ஊட்டச்சத்து உணவுகள் கிடைப்பதால் சற்று முன்னமே பூப்பெய்துவதற்கு வாய்ப்பு உள்ளது. இது இயற்கையே.
இதற்கு ப்ராய்லர் கோழி தான் காரணம் என்று கூறுவதற்கு அறிவியல் சான்றுகளோ ஆய்வுகளோ இல்லை. நாம் எந்த கவலையும் இன்றி பரப்பும் இதுபோன்ற மூடநம்பிக்கைகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை எளியோர் மட்டுமே.
இந்தக் கதைகளை உண்மை என்று நம்பிக் கொண்டு பள்ளிகளில் தினமும் இலவசமாக கொடுக்கப்படும் முட்டைகளை கூட உண்ணாமல் விடும் சிறுமியர் உண்டு. வாரம் ஒருமுறை கொஞ்சமாவது சாப்பிட்டு வந்த கோழிக்கறியைக் கூட அச்சத்துடன் உண்ணும் நிலை வருகிறது.
என்ன காரணம்?
ஆனால் மறுபக்கம் சமூகத்தில் பிசிஓடி என்று கருமுட்டை நீர்க்கக் கட்டி நோய் சிறுமியரிடத்தில் அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் முன்னெப்போதும் இல்லாத அளவு மாவுச்சத்து உள்ள உணவுகளை அதிகம் நுகர்தலும் தீனிக்கடைகள், பேக்கரிகள், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை அதிகம் உண்பதும் உணவுக்கு ஏற்ற உழைப்பு சிறிதும் இன்றி இருப்பதும் தான் முக்கிய காரணங்கள்.
ஆனால் அதை விட்டு விட்டு நாம் கோழி மீதும் முட்டை மீதும் நமது கவனத்தைத் திருப்புவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. பிசிஓடி ஏற்பட்ட பல மகளிருக்கு லேயர் கோழி முட்டையும் ப்ராய்லர் கோழி கறியும் உண்ணப் பரிந்துரைத்து அவர்கள் பிசிஓடியை வென்ற கதைகளை நான் பார்த்திருக்கிறேன்.
பண்ணைக் கோழி முட்டையில்/ கறியில் ஹார்மோன்கள் இருக்கிறது என்றால் இவை சாத்தியமில்லை என்பது திண்ணம்.
பெண்கள், சிறார், சிறுமியர், கர்ப்பிணிகள், பாலூட்டும் அன்னைகள் ஆகியோர் பண்ணைக் கோழி முட்டை மற்றும் கறியை அவர்களது புரதச்சத்து தேவையை கருத்தில் கொண்டு உண்ணலாம். அதனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை’’ என்று சிவகங்கை பொது நல மருத்துவர் Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
