ஹெபடைட்டிஸ் ஏ என்பது ஒருவகை ஆர்என்ஏ வைரஸ் ஆகும், இது கல்லீரல் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. தேசிய மதிப்பீடுகளின்படி, 2011-2013 க்கு இடையில் இந்தியாவில் 44,000 க்கும் மேற்பட்ட ஹெபடைடிஸ் ஏ தொற்று கண்டறியப்பட்டது. பெர்டுசிஸ் தவிர, நாட்டில் உள்ள அனைத்து தடுப்பூசிகளால் தடுக்கக்கூடிய நோய்களுடன் ஒப்பிடும்போது இந்த  வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. உண்மையில், ஹெபடைடிஸ் ஏ இன் உலகளாவிய இறப்பு ஒப்பீட்டு அளவில் சிக்கன் பாக்ஸ், டெட்டனஸ், டிப்தீரியா மற்றும் பெர்டுசிஸ் ஆகியவற்றை விட அதிகமாக உள்ளது. அதிர்ஷ்டவசமாக, கல்லீரல் செயலிழப்பிற்கு எதிரான தடுப்பூசி இதற்கு எதிராகப் பெரிதும் செயலாற்றுகிறது.


ஹெபடைடிஸ் ஏ தொற்று, குறிப்பாக மழைக்கால மாதங்களில் (ஜூலை-அக்டோபர்) கடுமையான ஹெபடைடிஸாக வெளிப்படும். வைரஸ் உடலில் நுழைந்த 2 முதல் 7 வாரங்களுக்குப் பிறகு நோய் தொடங்குகிறது. நோய்த்தொற்று நாள்பட்ட கல்லீரல் நோயை ஏற்படுத்துவதில்லை என்றாலும், 44-52 சதவிகித இறப்பு விகிதத்துடன் சுமார் 1 சதவிகித கேஸ்களில் கடுமையான கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தியுள்ளது. "இந்தியாவில் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளில் 40 சதவிகிதம் பேர் ஹெபடைடிஸ் ஏ நோயால் பாதிக்கப்படுகின்றனர், ஆனால் அதனுடன் தொடர்புடைய கடுமையான கல்லீரல் செயலிழப்பு அபாயத்தை தடுப்பூசி மூலம் முற்றிலும் தடுக்கலாம். இருப்பினும் இந்தியக் குழந்தைகளின் கடுமையான கல்லீரல் செயலிழப்புக்கான பொதுவான காரணமாக ஹெபடைடிஸ் ஏ தொற்று தொடர்ந்து நிலவி வருவது துரதிருஷ்டவசமானது,” என்கின்றனர் நிபுணர்கள்.




கேரளா, தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஹெபடைட்டிஸ் ஏ பாதிப்புகள் குழந்தைகளைப் பாதிக்கின்றன. தொற்று பெரும்பாலும் அசுத்தமான உணவு அல்லது தண்ணீர் மற்றும் போதுமான சுகாதாரமின்மை மூலம் பரவுகிறது.


மோசமான தனிப்பட்ட சுகாதாரம் ஒரு முக்கிய காரணியாகும், நோய்த்தொற்று இல்லாத நபர், பாதிக்கப்பட்ட நபரின் கழிவுகளுடன் எப்படியோ தொடர்புகொள்ளும்போது அவருக்கு தொற்று ஏற்படுகிறது.


குடும்பங்களில், பாதிக்கப்பட்ட நபர் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவு தயாரிக்கும் போது அவரது கரங்களின் வழியாக இது நிகழலாம். ஹெபடைடிஸ் ஏ வைரஸின் நீர்வழிப் பரவல்கள் மிகவும் அரிதாக இருந்தாலும் பொதுவாக கழிவுநீரால் மாசுபட்ட அல்லது போதுமான அளவு சுத்திகரிக்கப்படாத தண்ணீருடன் தொடர்புடையவையாக இவை இருக்கின்றன.


உணவை உண்ண முடியாத அளவுக்கு வாந்தி குமட்டல் போன்ற உணர்வு, தூக்கமின்மை அல்லது கோமா நிலைக்குச் செல்லுதல், கல்லீரல் மிகக் கடுமையாகச் செயலிழத்தல் ஆகியன இது தொடர்பான அறிகுறிகள் ஆகும்.உடனடியாக மருத்துவமனையில் அனுமதிப்பது அவசியம்.


இந்த நோய்தொற்றைக் கட்டுப்படுத்த மட்டுமே சிகிச்சை உள்ளது என்றாலும் அதற்கான நிரந்தரத் தீர்வு எதுவும் இல்லை. மேலும் கல்லீரல் மிகவும் மீட்கமுடியாத அளவுக்கு பாதிக்கப்படும் போது அது அந்த நபருக்கு மிகவும் ஆபத்தாக அமைகிறது.