உலக சுகாதார நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 31 அன்று, போலியான கோவிஷீல்ட் கோவிட் தடுப்புசிகள் தென்கிழக்கு ஆசியாவிலும், ஆப்பிரிக்கா பகுதிகளிலும் புழக்கத்தில் இருப்பதாக மருத்துவ எச்சரிக்கையை அறிவித்துள்ளது. இந்தியாவில் போலி கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் குப்பிகள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் இந்தப் போலியான தடுப்பூசிகள் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்டன எனவும், கோவிஷீல்ட் தடுப்பூசியைத் தயாரித்து வரும் சீரம் இன்ஸ்டிடியூட் மருந்து எடுத்துக் கொண்டவர்களிடம் பரிசோதனை செய்ததில், சில மருந்துகள் போலியாக உள்ளதாகவும், போலி மருந்துகள் புழக்கத்தில் இருப்பதாகவும் தெரிவித்தது.
CoWin போன்ற வெளிப்படையான முயற்சிகளுக்குப் பிறகும், போலி மருந்துகள் புழக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் தங்களது பிரத்யேக கண்காணிப்பு முறைகளின்படி, போலியா கோவிஷீல்ட் தடுப்பூசி குப்பிகளை இந்தியாவிலும், ஆப்பிரிக்க நாடான உகாண்டாவிலும் கண்டுபிடித்துள்ளது.
”போலி கோவிட் தொற்றுத் தடுப்பூசிகள் உலக சுகாதாரத்திற்குத் தீமை விளைவிப்பவை. ஏற்கனவே நோயால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கும், மருத்துவக் கட்டமைப்பிற்கும் கூடுதல் பாரம் கொடுப்பவை. இந்தப் போலியான தடுப்பூசிகளைக் கண்டறிந்து, அவற்றைப் புழக்கத்தில் இருந்து நீக்கி, நோயாளிகளைக் காக்க வேண்டும்’ என்று அறிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.
உலக சுகாதார நிறுவனம் இந்தியா உள்பட போலி தடுப்பூசி புழக்கத்தில் இருக்கு நாடுகளை மருத்துவமனைகள், கிளினிக், சுகாதார நிலையங்கள், மொத்த விற்பனையாளர்கள், விநியோகம் செய்பவர்கள், மருந்துக் கடைகள், மருத்துவப் பொருட்களின் சப்ளையர்கள் என எந்த இடமும் விடாமல் முழுவதுமாக கண்காணிப்புகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநில அரசு போலி கோவிஷீல்ட் தடுப்பூசிகளைக் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட மேஜிஸ்ட்ரேட், சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவரும் இந்தப் பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
”கோவிட் தொற்றை ஏற்படுத்தும் SARS CoV-2 வைரஸிடம் இருந்து, 18 வயதுக்கு மேற்பட்டோருக்குப் பாதுகாப்பை ஏற்படுத்தித் தரும் ஆற்றலைக் கொண்டது உண்மையான கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து. இந்த உண்மையான மருந்துகளைத் தேசியக் கட்டுப்பாட்டு ஆணையங்களின் வழிகாட்டுதலோடு செலுத்திக் கொள்ள வேண்டும்” எனவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் கோவிஷீல்ட் 2 மில்லி லிட்டர் தடுப்பூசியைக் கண்டறிந்துள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட்டில் 2 மில்லி லிட்டர் என்பது 4 டோஸ் மதிப்பைக் கொண்டது என்பதால், இந்த அளவில் தயாரிக்கப்படுவதில்லை. ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் 2021ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 10 அன்று எக்ஸ்பைர் தேதியோடு கண்டறியப்பட்டுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்தைத் தாங்கள் தயாரிக்கவில்லை என சீரம் இன்ஸ்டிடியூர் மறுத்துள்ளது.