சான் டியகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் ஒரு ஆப் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டது. கண்களை க்ளோசப்பில் போட்டோ எடுத்து கொடுத்தால் நமக்கு உள்ள நோய்களை, வருங்காலத்தில் வரப்போகும் நோய்கள் மற்றும் குறைபாடுகளை கூறுகிறதாம். மனிதனின் கண்கள் அவ்வளவு விஷயத்தை சேகரித்து வைத்திருக்கிறதா என்றால் ஆமாம். நம் கண்ணில் உள்ள சிறு சிறு விஷயங்கள் நம் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறிக்கிறதாம். அதன்மூலம்தான் அந்த ஆப் செயல்பட்டு நம் உடல் பற்றிய அறிக்கையை கொடுக்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில் எதுவும் சாத்தியம்தான். இன்னும் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு அந்த ஆப் கிடைக்காத நிலையில் நாமே நம் உடலை பற்றிய செய்திகளை கண்களை பயன்படுத்தி தெரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள். அதற்கு கண்களை உற்றுநோக்கி பார்த்தாலே போதுமாம். என்னென்ன குறிகள் இருந்தால் என்னென்ன குறைபாடுகள் என்று கண்டுபிடிக்க முடியுமாம். வாருங்கள் பார்க்கலாம்!


கருவிழியின் மையப்புள்ளி (pupil)


இந்த கருவிழிக்குள் இருக்கும் மையப்புள்ளி வெளிச்சத்தை கண்டால் உடனடியாக ரியாக்ட் செய்கிறது. ஒளி அதிகமாக இருந்தால் சிறியதாகவும், இருட்டாக இருந்தால் பெரியதாகவும் மாறுகிறது. இந்த மாறுபடுதல் தாமதமாக நிகழ்ந்தால் அல்சைமர் எனப்படும் மறதி நோய் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் அதிகமாக கொக்கைன் போன்ற போதைப்பொருள் பயன்படுத்துதல் என்று கூறப்படுகிறது. மிகவும் சிறிய pupil உள்ளவர்கள் ஹெராயின் பயன்படுத்துகிறார்கள் என்று அர்த்தமாம்.



சிவப்பு மற்றும் மஞ்சள் கண்கள்


கண்ணில் உள்ள வெள்ளைபகுதி நிறம் மாறுபட்டு காணப்பட்டால் மிகப்பெரிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். இரண்டு மூன்று நாட்களுக்கு கண்கள் சிவந்து இருந்தால், குடிப்பழக்கத்தினாலோ, போதைப்பழக்கத்தினாலோ ஏற்பட்டிருக்கும். நீண்ட நாட்கள் இருந்தால், நாம் பயன்படுத்தும் காண்டாக்ட் லென்ஸின் மூலம், அதன் சொல்யூஷன் மூலம் ஏதாவது இன்ஃபெக்ஷன் ஏற்பட்டிருக்கலாம். அதையும் தாண்டி மாதக்கணக்காக இருந்தால் தான் பிரச்சனை, அது க்ளோகோமா எனப்படும் கொடிய பார்வை இழத்தல் நோய்க்கு அறிகுறி ஆகும்.


அதுவே மஞ்சள் நிறமாக இருந்தால், அது மஞ்சள் காமாலை என்று நாம் எளிதாக கூறிவிடுவோம். அது தான் முதன்மை காரணம், ஆனால் இன்னொரு காரணமும் உண்டு. நமது ஈரல் பாதிக்கப்பட்டு இருந்தால் கண்கள் மஞ்சளாக இருக்கும். கல்லீரல் அழற்சி என்று கூறப்படும் ஹெப்படிட்டிஸ் நோயின் அறிகுறி என்று கூறுகிறார்கள். 


சிவப்பு புள்ளி


கண்ணின் வெள்ளைப்பகுதியில் சிவப்பு நிற புள்ளி இருப்பது நம்மை பயமுறுத்தும் அதற்கு உடலில் ரத்த நாளங்கள் ஏதோ வெடித்திருக்கிறது என்று அர்த்தம். பெரும்பாலும் அவை ஓரிரு நாட்களில் மறைந்து விடும். உயர் ரத்த அழுத்தம், நீரழிவு, ரத்தக் கட்டு நோய் ஆகியவற்றுக்கு இது அறிகுறி ஆகும். 



கருவிழியை சுற்றி வட்டம்


கண்ணின் கருவிழியை சுற்றி வெள்ளை நிறத்திலோ, சாம்பல் நிறத்திலோ வட்டம் தோன்றினால், அது கோலஸ்ட்ராலுக்கு அறிகுறி என்று கூறப்படுகிறது. அதனால் இதய நோய்கள் வரும் ஆபத்து இருப்பதையும் அது குறிக்கிறது. வயதானவர்களுக்கு அதிகம் தோன்றுவதால் அதற்கு முதிர் வளையம் என்ற பெயரும் உண்டு. அதிகமாக மது அருந்துபவர்ககுக்கும் இந்த பிரச்சனை ஏற்படலாம். 


கொழுப்புக் கட்டி


கண்ணில் ஏற்படும் கட்டி எளிதில் குணப்படுத்தக்கூடிய ஒரு கட்டியாகும். பின்குவெக்யுலா எனப்படும் இந்த கொழுப்பால் ஆன கட்டி எளிதில், ஐ டராப்ஸ் மூலமாகவோ சிறிய சிகிச்சை மூலமாகவோ குணப்படுத்தக்கூடிய நோயாகும். 


பெரிதாகும் கண்கள்


பெரிய கண்கள் என்பது சாதரணமாக முக அமைப்பு சம்மந்த பட்டது தான். ஆனால் முன்பெல்லாம் இல்லாமல், திடீரென கண்கள் பெரிதானால் அது கவனிக்கவேண்டிய விஷயம். தைராய்டு சுரப்பி அதிகமாக சுரப்பதனால் இது ஏற்படலாம். இல்லையென்றால் கண்களுக்கு பின்னால் கட்டி ஏற்பட்டால் கூட இந்த பிரச்சனை ஏற்படலாம். 



இமை வீக்கம்


கண் இமைகள் மீது வீக்கம் ஏற்படுவதற்கு காரணம் எண்ணெய் அல்லது சுரப்பிகள் சேர்ந்த கட்டியாக இருக்கலாம். சூடாக ஒத்தடம் கொடுப்பதன் மூலம் இதனை குணப்படுத்ததலாம். நீண்ட நாட்கள் தொடர்ந்தாலும் இது எளிதில் குணப்படுத்தக் கூடியதே.


இமை துடிப்பு


இமை துடிப்பது நம்மை தொடர்ந்து தொந்தரவு செய்யும் ஒரு விஷயமாகும். இதனால் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை. மன அழுத்தத்தின் காரணமாக இது ஏற்படலாம். அதிகமாக கெஃபைன் அதாவது காபி, டீ எடுத்துக்கொள்வதன் மூலமும் இது ஏற்படும். நியூட்ரிஷன் குறைபாடு ஏற்பட்டாலும் இப்படி ஆகும்.