‛வாயால கெட்ட’ என்பார்கள். வாயிலிருந்து வரும் வார்த்தைகளை தான் பலர் அதற்கான அர்த்தம் என நினைப்பார்கள். அதுவும்உண்மை தான். ஆனால், இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. அது வாய் உள்ளே இருக்கும் பற்கள் சம்மந்தப்பட்டது. பற்கள் சுத்தமாக இருந்தால், வாய் சுத்தமாக இருக்கும். வாய் சுத்தமாக இருந்தால், உடலே சுத்தமாக இருக்கும். அதனால் பற்களை பராமரிப்பது அவசியம் ஆகிறது.
காலையில் எழுந்து வாய் கொப்பளிப்பதை கூட பெரிய வேலை பளுவாக பலர் கருதுகின்றனர். ஆனால், உண்மையில் அதிலிருந்து தான் தொடங்குகிறது உங்கள் உடல் நலனுக்கான ஆரோக்கியம். பல் துலக்குவதை விட, அதற்கு பயன்படுத்தப்படும் டூத் பேஸ்ட் எனப்படும் பற்பசையை தேர்வு செய்வதில் தான் பலருக்கு குழப்பம். உப்பு இருக்கா? உளுந்து இருக்கா? ஊறுகாய் இருக்கா?னு விளம்பரத்தை போட்டு குழப்பிவிடுவதால் ஏற்படும் சிக்கலாக கூட இருக்கலாம். ப்ராண்டு என்பதை தவிர்த்து, நமது பற்களுக்கு எந்த வகை பற்பசை தேவை என்பதை அறிவியல் பூர்வமாக பார்க்கலாம்.
யாருக்கு எந்த பற்பசை நல்லது?
புளூரைடு, சைவிட்டால், ஜெல், பற்கரை பற்பசை என பல வகைகள் உள்ளன. இதில் பற்களுக்கு வலு சேர்ப்பதில் புளூரைடு பற்பசைகள் தான் பற்களுக்கு நல்லது என்கின்றனர் நிபுணர்கள். உண்மையில் பற்பசைகள் வயதிற்கு ஏற்ப மாறுபட்ட பயன்பாட்டை கொண்டவை. அதற்காக தான் சிறியவருக்கு, பெரியவருக்கு என தனித்தனி பற்பசைகள் இங்கு உள்ளன. புளூரைடில் உள்ள சிலிக்கா பவுடர், பல் எனாமலை பாதிக்கும்.
பற்கூச்சம் இருந்தால் நீங்கள் பயன்படுத்தும் பற்பசையில் டிசென்சிடைசிங் இருக்க வேண்டும். அது இருக்கும் பற்பசையை பயன்படுத்துவது உங்களுக்கு நல்ல பலனளிக்கும். பற்கூச்சத்தை போக்கும். ட்ரைக்ளோசான் பற்பசைகள் ஈறுகளுக்கு ஆரோக்கியம் தரும் என்கிறார்கள். பெரும்பாலானோர் ஈறு பிரச்சனையால் பாதிக்கப்படுவதுண்டு. அவர்கள், ட்ரைக்ளோசான் பற்பசையை பயன்படுத்துவது நல்லது. பல்லில் காரை படிவதையும் இது தடுக்கும்.
பல் துலக்கும் ப்ரஷ் தேர்வு செய்வது எப்படி?
பற்பசையின் வகைகள் இவை என்றால், அதை துலக்கும் முறை அதை விட முக்கியம். சிலர் தரையில் பிரஷ் போட்டு தேய்ப்பதைப் போன்று, பற்களையும் தேய்த்தால் பளிச்சிடும் என நினைத்து, பற்களை ஒருவழி செய்துவிடுவார்கள். ஆனால், எதற்குமே ஒரு முறை இருக்கிறது. அதற்கு நீங்கள் நல்ல ப்ரஷ் தேர்வு செய்ய வேண்டும். சாஃப்ட், மீடியம், ஹார்டு என ப்ரஷ்ஷில் 3 வகை உண்டு. பெரும்பாலும் ஹார்டு வகை ப்ரஷ் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவதில்லை.
பற்கூச்சம் இருந்தால், நீங்கள் சாஃப்ட் ப்ரஷ் பயன்படுத்த வேண்டும். மற்ற அனைவருக்கும் மீடியம் ரக ப்ரஷ் தான். இது தான் பாஃர்மட். நல்ல ப்ரஷ் கண்டுபிடிப்பது எப்படி என குழப்பம் இருக்கும். ரொம்பி ஈஸி.... தலைப்பகுதிய சிறிதாக இருந்தால், அதுவே சிறப்பான ப்ரஷ். அது பல்லின் அனைத்து பகுதிக்கும் சென்று துலக்கும். அதே போல கைப்பிடியையும் நீங்கள் பார்த்து வாங்க வேண்டும். அது உங்களுக்கு வசதியாக இருந்தால், பல் துலக்குவது இன்னும் எளிதாக இருக்கும்.
இவற்றை தவிர்த்து, கவர்ச்சியாக மாடலாக, டிசைன் டிசைனாக ஏதாவது ப்ரஷ் விற்பனைக்கு வந்தால், அதை தவிர்ப்பது தான் உங்களுக்கும், உங்கள் பற்களுக்கும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். அதே போல, ஒரு ப்ரஷ் பயன்படுத்த ஒரு காலம் இருக்கிறது. ஆண்டு கணக்கில் பயன்படுத்தக்கூடாது. அதன் இழை விழத்தொடங்கியதும், ப்ரஷ் மாற்றப்பட வேண்டும். குறைந்தது 3 மாதங்களுக்கு ஒரு முறை அவற்றை மாற்றுவது மிகச்சிறந்தது.
எப்போதெல்லாம் துலக்கலாம், எப்படி துலக்கலாம்?
காலையில் எழுந்ததும், இரவில் உறங்கும் முன்பும் பல் துலக்குவது நல்லது. குறைந்தது 3 நிமிடங்கள் பல் துலக்க வேண்டும். வேகமாகவும், அழுத்தமாகவும் தேய்த்தால் பல் சுத்தமாகும் என நினைப்பது தவறு. அது பல் தேய்மானத்தை ஏற்படுத்தும். எனவே பிரஷ்யை 45 டிகிரியில் பிடித்து, மேல்தாடை பற்களை மேலிருந்து கிழும், கீழ் தாடை பற்களை கீழிருந்து மேலும் வட்ட சுழற்ச்சியில் துலக்க வேண்டும். உங்கள் உணவுகளை வெட்டும் பற்களை, முன்னும் பின்னுமாய் துலக்க வேண்டும். நாக்கை தனியாக வழிப்பான் கொண்டு சுத்தம் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் பயன்படுத்தும் ப்ரஷ் மூலமாகவே சுத்தம் செய்யலாம்.
பற்களின் இடையே ப்ரஷ் இழைகள் நுழையாது. அதனால் உணவுப் பொருட்கள் சிக்கி, சில சிரமங்களை தரும். அதற்காக தினமும் பிளாஸ்ஸிங் செய்யலாம். இதற்காக பல் பிளாஸ்ஸிங் நூல் என தனியாக உள்ளது. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். தினமும் ஒரு கேரட், வெள்ளரி சாப்பிட்டால் பல் இயற்கையாகனே சுத்தம் ஆகும். சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி பல் பிரச்சனைகள் ஏற்படும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்தினால், அந்த தொந்தரவு இருக்காது. முடிந்தவரை குறைபாடுகள் இருப்பவர்கள் பல் மருத்துவர்களை ஆலோசனை செய்து அதற்கு ஏற்ப ப்ரஷ், பற்பசையை பயன்படுத்துவது மிகச்சிறந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்