கண்ணில் ஏற்படும் சாதாரண பிரச்சனைகளுக்கு நம்மில் பலரும் நாமே மருந்துக் கடைகளில் ஜென்டாமைசின் போன்ற மருந்தை வாங்கிப் பயன்படுத்துவது உண்டு. சிலர் முறையாக மருத்துவரை நாடி மருந்துகளைப் பெறுவதும் உண்டு. மருந்தை எப்படி வாங்கினாலும் அதில் பெரிய எழுத்துகளில் ஒரு எச்சரிக்கை வாசகம் அச்சிடப்பட்டிருக்கும். மருந்தைத் திறந்ததில் இருந்து ஒரு மாதத்திற்குள் பயன்படுத்திடவும் என்பதே அந்த எச்சரிக்கை வாசகம். இதுபோன்ற நுட்பமான விஷயங்களை நாம் பெரும்பாலும் கவனிப்பதில்லை. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் இது.
உங்களுக்கு ஒருவேளை இதுவரை அதற்கான விளக்கம் தெரியாவிட்டால் இதைப் படியுங்கள் தெரிந்து கொள்வீர்கள். கண் மருந்தில் திறந்தபின்னர் ஒரு மாதத்திற்குள் பயன்படுத்தவும் என்று ஏன் குறிப்பிடுகிறார்கள் என்றால் கண் மருந்து எளிதில் வெளிப்புற கிருமிகளால் அசுத்தமாகும் வாய்ப்பு மிகமிக அதிகம். அதனால் ஒரு மாதத்திற்குப் பின்னரும் நாம் கண் மருந்தை பயன்படுத்தும்போது அதனால் கண்களில் மிகவும் ஆபத்தான தொற்று நோய்கள் ஏற்படக்கூடும்.
இது குறித்து கண்நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரிச்சா பியாரே அளித்துள்ள பேட்டியில், "கண்கள் மிகவும் மென்மையானவை. கண்களில் மருந்துகளை ஊற்றுவது என்பது கவனமாகக் கையாளப்பட வேண்டியது. ஒரு கண் மருந்து பாட்டிலைத் திறந்து பயன்படுத்த ஆரம்பித்து ஒரு மாதத்திற்குப் பின்னரும் அதைப் பயன்படுத்தினால் கண்களில் தீவிர தொற்று ஏற்படும்.
பெரும்பாலான கண் மருந்துகள் கண்ணில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றை குணப்படுத்தவே தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் காலாவதி தேதி இரண்டு ஆண்டுகள் மூன்று ஆண்டுகள் என்று இருந்தாலும் கூட அவற்றை திறந்தபின்னர் அவற்றின் காலாவதி காலம் 28 நாட்கள் தான். திறந்ததில் இருந்து குறிப்பிட்ட நாட்களில் கண் மருந்துகள் கெட்டுப்போவது உறுதி. அதனால் அத்தகைய மருந்தை பயன்படுத்தினால் கண் பார்வை கூட பறிபோகலாம். எடுத்தவுடனேயே பார்வை பறிபோகாது. கண் எரிச்சல், கண் சிவத்தல், கண்களில் இருந்து நீர் வழிதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இவ்வாறு ஏற்பட்டால் உடனடியாக கண் மருத்துவரை அணுகுங்கள்.
கண் மருந்துகளைப் பயன்படுத்தும் முன்னர் கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். மருந்தின் குறிப்பேட்டில் கொடுத்திருக்கும் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும். படுத்துக் கொண்டு தலையை கொஞ்சம் பின்னால் சாய்த்துக் கொண்டு மருந்தை கண்ணில் ஊற்றவும். ஒரு சொட்டு என்று கொடுத்திருந்தால் ஒரு சொட்டு மட்டுமே விடவும். மருந்தை ஊற்றிய பின்னர் கண்களை மூடிக் கொண்டு விரலால் மெதுவாக மசாஜ் செய்யவும். ஒரு மாதம் முடிந்தவுடன் மருந்து பாட்டிலை தூக்கி எறிந்துவிட்டு மருத்துவரை ஆலோசித்துவிட்டு தேவைப்பட்டால் மருந்தைத் தொடரலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் திறந்ததில் இருந்து ஒரு மாதத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடாது" என்று கூறியுள்ளார்.
கண் மருந்தால் பறிபோன உயிர்:
சென்னைக்கு அருகே உள்ள, தனியார் மருந்து நிறுவனம் உற்பத்தி செய்த கண் மருந்தில், அதிகளவு பாக்டீரியாவால் அமெரிக்காவில் 55 பேரின் பார்வை பறிபோனது. மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடந்த மாதம் நடந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தால் மத்திய அரசு அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டது நினைவில் இருக்கலாம்.