தமிழகத்தில் குழந்தைகள் மத்தியில் காய்ச்சல் அண்மையில் வேகமாகப் பரவி வருகிறது. இதற்குக் காரணம் என்ன? மருந்துகள் கொடுப்பதில் ஆலோசனைகள், காய்ச்சலைத் தடுப்பது எப்படி? என்று விரிவாகப் பார்க்கலாம். 


புதுச்சேரியில் பரவி வரும் ஃப்ளூ காய்ச்சல் காரணமாக 150 குழந்தைகள் உட்பட 192 பேர் சிகிச்சையில் உள்ளனர். காய்ச்சலில் எந்தவித வைரஸும் கண்டறியப்படாத நிலையில், அங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு செப்.25ஆம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழகத்திலும் காய்ச்சல் பாதிப்பு


புதுச்சேரியைப் போல தமிழகத்திலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் பன்றிக் காய்ச்சலால் 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 243 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். அவர் பேசும்போது, ''இன்று ஒரே நாளில் மட்டும் 47 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக இதுவரை தமிழகத்தில் 965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இதில் பெரும்பாலானோருக்கு பெரிய பாதிப்பில்லை. கடந்த ஜனவரியில் இருந்து காய்ச்சலால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.


பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?


குழந்தைகளுக்கு வைரஸால் காய்ச்சல், உடல் வலி, தலை வலி, சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளன. இத்தகைய அறிகுறிகள் இருந்தால், பெற்றோர்கள் அவர்களைப் பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது. ஏனெனில் இருமல், தும்மல் மூலம் வெளியாகும் நீர்த்திவலைகள் மூலம் மற்றவர்களுக்குப் பரவுகிறது. அதேபோல ஆசிரியர்கள் பள்ளிகளில் குழந்தைகளுக்குக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தால், உடனடியாக வீடுகளுக்குத் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். 


தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. 3 முதல் 5 நாட்களுக்குள் காய்ச்சல் சரியாகி விடுகிறது. பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் மாற்றங்களே இவை. அதனால் இங்கு பதற்றப்பட வேண்டிய சூழல் இல்லை. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியம் இல்லை'' என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 




சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தினந்தோறும் சராசரியாக 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். 837 மருத்துவப் படுக்கைகள் உள்ள நிலையில், 60 சதவீத அளவுக்குப் படுக்கைகள் நிரம்பி உள்ளன. பருவமழைக் காலத்தில் கொசு மருந்து அடிப்பது, அவற்றை விநியோகிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் 19 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 


அதிகரிக்கும் காய்ச்சலுக்கு என்ன காரணம்? என்பது பற்றி குழந்தைகள் நல மருத்துவர் குணசிங் ABP நாடுவிடம் பேசினார்.


'' சுவாசம் தொடர்பான வைரஸ்களே காய்ச்சலைத் தோற்றுவிக்கின்றன. 21 வைரஸ்களில் ஆர்எஸ்வி வைரஸ், அடினோ வைரஸ் மற்றும் ஃப்ளூ வைரஸ் ஆகியவையே காய்ச்சலுக்கு முக்கியக் காரணம். 


 காய்ச்சல் தொற்றும் நோய் என்பதால், மழைக் காலத்தில் அதிகமாகப் பரவுகிறது. பள்ளிகளிலும் தொற்று அதிகரித்துள்ளது.


 கொரோனா காலத்தில் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினர். வீடடங்கி இருந்தனர். இதனால் காய்ச்சல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 


என்ன மருந்துகள் கொடுக்க வேண்டும்?


இவற்றுக்கு வழக்கமான காய்ச்சல் மருந்துகளை அளித்தால்போதும். வேறு மருந்துகள் எதுவும் அவசியமில்லை. எனினும் இதயம், நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் உள்ள குழந்தைகள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது  முக்கியம். பன்றிக் காய்ச்சலுக்கு மட்டும் வேறு மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். 


காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?


* நிறைய நீராகாரங்களைக் கொடுக்க வேண்டும். 


* தண்ணீரை அதிகம் எடுத்துக்கொள்ள வைக்க வேண்டும். 


* தொடர்ச்சியாக பாராசிட்டமாலைக் கொடுத்துக் கொண்டே இருக்கக் கூடாது. ஏனெனில் பாராசிட்டமால், கல்லீரலைப் பாதிக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. 




எப்போது மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்?


* காய்ச்சல் வந்தால் உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. அப்படிச் சென்றால் மருத்துவமனைகளில் இடமே இருக்காது. 


* வழக்கமாக காய்ச்சல் 3 முதல் 5 நாட்களுக்குள் சரியாகிவிடும். 3 நாட்கள் வரை மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். 


* எனினும் மூச்சுத் திணறல், வலிப்பு உள்ளிட்ட அபாய அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும். 


* அதேபோல வாந்தி, மயக்கம் உண்டானாலோ, அசாதாரணமாக உணர்ந்தாலோ மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். 


தடுப்பது எப்படி?


* கொரோனா காலத்தில் நாம் பின்பற்றிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீண்டும் தொடர வேண்டும். குறிப்பாக,


* முகக்கவசம் அணிவது, 


* வெளியே சென்றுவிட்டு வந்த பிறகு கைகளை சுத்தமாகக் கழுவுவது, 


* கூட்டம் அதிகமுள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது,


* தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். 


* கொரோனா தடுப்பூசியைப் போல, அனைத்துக் குழந்தைகளுக்கும் காய்ச்சல் தடுப்பூசியைச் செலுத்த வேண்டும்.


* முடிந்த அளவு வெளிப்புற உணவுகளை உண்ணாமல் தவிர்க்க வேண்டும்.


* வீட்டைச் சுற்றி மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 


 





பள்ளிகளுக்கு விடுமுறை அவசியமா?


புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை மற்றும் அச்சத்தின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கலாம். இந்த வைரஸ்ல்களால் உயிரிழப்பு எதுவும் அதிகம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அதனால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறேன். எனினும் இணை நோய் உள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதைத் தவிர்க்கலாம்''.


இவ்வாறு குழந்தைகள் நல மருத்துவர் குணசிங் தெரிவித்தார். 


என்னென்ன உணவுகளைக் கொடுக்கலாம்?


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் செல்வ ரம்யா ABP நாடுவிடம் பேசினார். ''வைட்டமின் சி அதிகமுள்ள பொருட்கள் அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டவை. குறிப்பாக சாத்துக்குடி, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். எலுமிச்சை சாதம் உண்ண வைக்கலாம். பாலில் சிறிதளவு மஞ்சளைச் சேர்த்துக் கொடுக்கலாம். 



அதேபோல மழைக் காலங்களில் மிளகு சேர்க்கப்பட்ட ரசத்தை அதிகம் உட்கொள்ள வைக்கலாம். துரித உணவுகளுக்கு பதிலாக, காய்கறிகள், கீரைகள், பழங்கள் என ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை அளித்தால் போதும். குழந்தைகள் காய்ச்சிய தண்ணீரை மட்டும் அருந்துவதை உறுதி செய்வது முக்கியம்'' என்று மருத்துவர் செல்வ ரம்யா தெரிவித்தார். 


பெற்றோர் காய்ச்சல் வந்தால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பக் கூடாது. பதற்றப்படாமல் குழந்தைகளுக்கு சரியான மருந்தையும் சரிவிகித உணவையும் அளிக்க வேண்டும். அதன்மூலமே தொற்று நோய் பெருமளவில் கட்டுப்படுத்தப்படும். 


பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நலனைப் பாதுகாப்பதோடு, அவர்களிடம் இருந்து மற்ற குழந்தைகளுக்குப் பரவாமல் இருப்பதையும்உறுதி செய்யவேண்டும்.