சிகரெட் இல்லாமல் புகையிலையை உபயோகிக்கும் பழக்கம் உடையவர்கள் வாப்பிங் செய்வார்கள். சிகரெட்டை விட வாப்பிங் பாதுகாப்பானது எனக் கூறப்பட்டாலும் அதற்கே உண்டான சில பாதிப்புகளும் உண்டு என ஆராய்ச்சியாளர்கள் பட்டியலிட்டுள்ளனர். அந்த வகையில் அண்மையில் வாப்பிங் செய்வது பற்கறை படிவது மற்றும் பற்கள் பாதிக்கப்படுவது போன்ற பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என அறியப்பட்டுள்ளது. பற்களில் கறை படிவதால் உங்கள் பல் மருத்துவரை அடிக்கடி சென்று சந்தித்துவிட்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். 


டஃப்ட்ஸ் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் டென்டல் மெடிசின் குழுமத்தின் ஆராய்ச்சியாளர்கள், வாப்பிங் சாதனங்களைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொண்ட நோயாளிகளுக்கு பற்களில் குழிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறிந்துள்ளனர். மத்திய பல் பாதுகாப்புக் கழகத்தின் ஆய்வுகளின்படி, 9.1 மில்லியன் முதிய அமெரிக்கர்கள் மற்றும் 2 மில்லியன் இளைஞர்கள் புகையிலை அடிப்படையிலான வாப்பிங் பொருட்களைப் பயன்படுத்துவதால் அவர்கள் பற்கள் ஆபத்தில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது




.
ஆய்வாளர் கரினா இருசா கூறுகையில், ”வாப்பிங் சாதனங்களின் பயன்பாடு நுரையீரல் நோயுடன் தொடர்புடையது என்பதால், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வாப்பிங் ஏற்படுத்தும் ஆபத்துகள் குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வு வளர்ந்துள்ளது” என்கிறார். மேலும், ”சில பல் மருத்துவ ஆய்வுகள் ஈ-சிகரெட் பயன்பாட்டை அதிக அளவு பல் ஈறுகளில் ஏற்படும் நோயுடன் தொடர்புபடுத்தியுள்ளன மற்றும் பல்லின் வெளிப்புற அடுக்கான எனாமல் அரிப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால் ஈ-சிகரெட்டைப் பயன்படுத்துவதற்கும் வாய்வழி ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றி ஆய்வு செய்ய பல் மருத்துவர்கள் கூட அதிக கவனம் செலுத்தவில்லை என்று இருசா கூறுகிறார்.


சமீபத்திய டஃப்ட்ஸ்  யுனிவர்சிட்டி கண்டுபிடிப்புகள் வாயில் ஏற்படும் பாதிப்பின் ஒரு பகுதியை  மட்டுமே குறிப்பிடுகின்றன என்று இருசா குறிப்பிடுகிறார். அவர் கூறுகையில், " வாப்பிங் பழக்கத்தால் பல் ஆரோக்கியத்தில் ஏற்படும் விளைவுகளின் அளவு குறிப்பாக பல் சிதைவு இன்னும் ஒப்பீட்டளவில் எவ்வளவு எனத் தெரியவில்லை," என்கிறார். கூடவே இ சிகரேட் பயன்பாடு வாப்பிங் போன்றவற்றுக்கும் பல்சிதைவு நோய்களுக்கும் இடையிலான தொடர்பைக் கண்டறிய இது அடிப்படை ஆய்வாக இருக்கும் என்கிறார் அவர். 2019 மற்றும் 2022 க்கு இடையில் டஃப்ட்ஸ் பல் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 16 வயதுக்கு மேற்பட்ட 13,000 நோயாளிகளின் தரவுகள் இருசா மற்றும் அவரது குழுவினரால் பரிசோதிக்கப்பட்டன.


இ-சிகரெட்/வாப்பிங் பயன்படுத்தும் குழுவிற்கும் கண்ட்ரோல் குழுவிற்கும் இடையே பல் சிதைவு பாதிப்பில் புள்ளியியல் ரீதியாக குறிப்பிடத்தக்க வேறுபாடு இருப்பதை இருசா கண்டுபிடித்தார்.


வாப்பிங் நோயாளிகளில் சுமார் 79 சதவீதம் பேர் மற்றும் கண்ட்ரோல் குழுவில் சுமார் 60 சதவீதம் பேர் மட்டுமே அதிக பல்சிதைவு அபாயம் உள்ளவர்களாக வகைப்படுத்தப்பட்டனர். "இது முதற்கட்டத் தரவு என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். இது 100 சதவீதம் முடிவானது அல்ல மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும், மேலும் வாப்பிங் பழக்கம் உமிழ்நீரின் நுண்ணுயிரியலை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்கிறார் இருசா.