ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதை தொடர்ந்து அடுத்தடுத்து பல அப்டேட்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளிவந்து ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்து வருகிறது. அந்த வகையில் இன்று புதிதாக வெளியான அப்டேட் என்னவென்றால் படத்தின் கதாநாயகியான மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர் ஜிப்ரான் இசையமைப்பில் துணிவு படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது தான்.


 



 


பொங்கல் ரிலீஸ் :


ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த மூவரின் கூட்டணி நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக துணிவு திரைப்படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் 'சில்லா சில்லா' பாடல் சமீபத்தில் வெளியாகி ஏராளமான வியூஸ் பெற்று சூப்பர் ஹிட் பாடலாக ட்ரெண்டிங் பிளே லிஸ்டில் இடம் பெற்றுள்ளது. அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இப்படம் பொங்கல் ரிலீஸாக உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


 






 


மஞ்சு வாரியர் பாடிய துணிவு பாடல் :


பஞ்சாபில் 1987ம் ஆண்டு நடைபெற்ற வங்கி கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில் டப்பிங் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்த தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் படத்தில் ஹீரோயின் மஞ்சு வாரியர் இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளங்களில் போஸ்ட் ஒன்று செய்துள்ளார். நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'துணிவு' படத்தில் நடித்ததோடு ஒரு பாடலையும் பாடியுள்ளேன் என நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். 


 






 


துணிவு படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில், அதிக செல்வாக்கு உள்ள உதயநிதி, துணிவு படத்திற்கு அதிக அளவு திரையரங்குகளை கைப்பற்றி விட்டதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.