கோடை என்றாலே கொளுத்தும் வெயிலால் வறட்டும் நாவறட்சியும், பிளக்கும் தலைவலியும் சேர்ந்தே வந்துவிடும். அதனாலேயே கோடை காலத்தில் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் எவ்வளவு தண்ணீர் தான் குடிக்க முடியும் என்று கேட்பவர்களும் உண்டு. இந்த கோடை கால பானம் அவர்களுக்காகவே.
இதை எளிதாக செய்யலாம். நிறைய பொருட்களும் தேவைப்படாது. ஆனால் குடித்தால் புத்துணர்ச்சி கேரன்டி. குடித்தவுடன் புத்துணர்வு தரும் இந்த டீயை மாயாஜால டீ என்றழைத்தாலும் கூட தவறில்லை.
இந்த பானத்தை அருந்துவதால் கோடைகால தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். உப்புசம் விலகும். வயிற்று வலி தீரும். நீர்ச்சத்து கிடைக்கும். அசவுகரிய உணவு குறையும். அதுமட்டுமல்லாது ஏதோ பாரமாக இருப்பது போல் சில நேரம் உணர்வோம் அல்லவா? அதுவும் தீரும்.
செய்முறை:
ஒரு கிளாஸ் தண்ணீர் (250 மில்லி அளவு) எடுத்துக் கொள்ளுங்கள்.
அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி 5 முதல் 7 புதினா இலையைப் போடுங்கள். பின்னர் ஒரு டீஸ்பூன் சீரகம், 1 டேபிள் ஸ்பூன் மல்லி போட்டுக் கொள்ளுங்கள். 5 நிமிடங்கள் அதை கொதிக்க விடுங்கள். கொதித்துவிட்டது என்பதை வீடு நிறையும் வாசனையே உணர்த்திவிடும். பின்னர் அதனை வடிகட்டி அருந்துங்கள்.
நன்மைகள்:
ஒற்றைத் தலைவலி, அதிக கொழுப்பு, நீரிழிவு, தைராய்டு சுரப்பி பிரச்சினை, அசிடிட்டி, கேஸ்ட்ரிக் தொந்தரவுகள், ஹார்மோன் பிரச்சினைகள், மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது நல்ல மருந்தாக அமையும்.
இதை ஒரு நாளில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அருந்தலாம். காலையில் எழுந்தவுடனும் குடிக்கலாம். உணவுக்கு அரை மணி முன் அல்லது பின்னர் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் எப்போது ஹெவியாக தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அருந்தலாம்.