மருத்துவ சிகிச்சைகளுக்காக நோயாளிகள் எல்லைகளைக் கடந்து அயல் நாடுகளுக்கு பயணிப்பது medical tourism அல்லது medical value travel தமிழில் மருத்துவ சுற்றுலா என்று அழைக்கப்படுகிறது.


2020ஆம் ஆண்டின் மத்தியில் உலகளாவிய மருத்துவ சுற்றுலா குறியீட்டில் இந்தியா 10ஆவது இடத்தைப் பிடித்தது. மத்திய அரசின் ‘ஹீல் இன் இந்தியா’திட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவுக்கு மருத்துவ சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.


மருத்துவம், ஆரோக்கியம் மற்றும் ஐவிஎஃப் சிகிச்சைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 78 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 20 லட்சம் நபர்கள் வருகை தருகின்றனர். ஆண்டுக்கு 600 கோடி வரை இதன் மூலம் வருவாய் ஈட்டப்படுகிறது.


2026ஆம் ஆண்டளவில் மருத்துவ சுற்றுலா மூலம் 1300 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு மருத்துவ மதிப்புள்ள மூன்று வகைப் பயணங்களை அயல் நாட்டவர்கள் மேற்கொள்கின்றனர்.


மருத்துவ சிகிச்சை


அறுவை சிகிச்சைகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், மூட்டு மாற்று சிகிச்சைகள், புற்றுநோய் மற்றும் நாள்பட்ட நோய் சிகிச்சைகள்.


ஆரோக்கியம் & புத்துணர்வாக்க சிகிச்சை (Rejuvenation) 
 
காஸ்மெடிக் அறுவை சிகிச்சை, மன அழுத்தத்தக் குறைப்பதற்கான சிகிச்சைகள், ஸ்பாக்கள் போன்ற புத்துணர்ச்சி / அழகியல் சார்ந்த சேவைகள்.


பாரம்பரிய மருத்துவம்


ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு ஆயுஷ் அமைச்சகம் பொறுப்பு.


சென்னை, தமிழ்நாடு:


இந்தியாவின் சுகாதாரத் தலைநகரமாக விளங்கும் சென்னை, மருத்துவ சிகிச்சைகளுக்காக இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாக விளங்குகிறது.


இந்தியத் தொழில் கூட்டமைப்பு தரவுகளின்படி, கிட்டத்தட்ட 40 விழுக்காடு நோயாளிகள் சிறந்த, தரமான மருத்துவ சேவைகளுக்காக சென்னையைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதய பைபாஸ், இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, கண் அறுவை சிகிச்சை மற்றும் இதர மருத்துவ நடைமுறைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 200 வெளிநாட்டு நோயாளிகள் சென்னைக்கு வருகை தருகின்றனர்


பெங்களூர், கர்நாடகா:


இந்தியாவில் சிறந்த மருத்துவ சேவையை நாடும் நோயாளிகள் நிச்சயம் மருத்துவ சுற்றுலாவுக்கு பெங்களூரை தேர்வு செய்யலாம். உயர் தகுதி வாய்ந்த மருத்துவ வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சிக் குழுக்களால் இங்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.


கோயம்புத்தூர், தமிழ்நாடு


அல்லோபதி உள்பட பல்வேறு சிகிச்சைத் தேர்வுகளை கோவை தரமான முறையில் வழங்குகிறது. கோவையில் பல புகழ்பெற்ற மருத்துவமனைகள் உள்ளன. சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, ENT,ஆரோக்கியம் உள்ளிட்ட பிற பாரம்பரிய மருத்துவ முறைகளும் இங்கு பிரபலமாக உள்ளது. 


அலப்பி, கேரளா


கேரளாவில் உள்ள அலெப்பி மருத்துவ சுற்றுலாவுக்கான ஹாட்ஸ்பாட் தளமாக விளங்குகிறது. ஆயுர்வேத சிகிச்சைகள் மூலம் புத்துணர்ச்சி பெற விரும்பும் அயல் நாட்டவர்கள் அலெப்பியை தான் முதல் தேர்வாகக் கொண்டுள்ளனர்.


வேலூர், தமிழ்நாடு


மருத்துவ சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற தமிழ்நாட்டின் மற்றொரு நகரம் வேலூர். இங்கு அதிநவீன பரிசோதனை, முன்னணி மருத்துவ வசதிகள் உள்ளன. இங்கு அக்குபஞ்சர், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மற்றும் அலோபதி மருத்துவ சிகிச்சைகள் சிறப்பான முறையில் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு வேலூரில் மருத்துவப் பயணத்தை தீவிரமாக ஊக்குவித்து வருகிறது.