தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக, சிறந்த குணச்சித்திர நடிகராக திகழ்ந்த நடிகர் வைகை புயல் வடிவேலு தனது இரண்டாவது இன்னிங்ஸை 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் மூலம் ஆரம்பித்துவிட்டார். 2017ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான "மெர்சல்" திரைப்படத்திற்கு பிறகு சுமார் நான்கு ஆண்டு காலமாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்த நடிகர் வடிவேலு மீண்டும் தனது ரீ என்ட்ரி மூலம் ரசிகர்களை முழுமையாக ஆக்கிரமிக்க தயாராகிவிட்டார். அந்த வகையில் நேற்றைய தினம் படத்தில் இருந்து வடிவேலு பாடி, பிரபுதேவா நடனம் அமைத்த அப்பத்தா பாடல் வெளியானது. சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ள இந்தப்படத்தை இயக்குநர் சுராஜ் இயக்கி உள்ளார்.
படம் பற்றி அவர் பகிர்ந்ததாவது, “ மருதமலை படத்தில் வடிவேலு ஏற்று நடித்த என்கவுண்டர் ஏகாம்பரம் கதாபாத்திரத்திரம் 2 மணி நேரம் வந்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அப்படித்தான் இந்தப்படம் இருக்கும். படம் ஆரம்பித்தது முதல் கடைசி வரை காமெடிதான். சென்டிமெண்ட்டுக்கு இங்கு இடமே கிடையாது. அந்த கதாபாத்திரத்தை மனதில் வைத்துதான், அவரின் நாய்கள் திருடும் கதாபாத்திரத்தை உருவாக்கினோம்.அவருக்கு இந்த கதாபாத்திரம் நிச்சயம் வித்தியாசமானதாக அமையும்.
இதற்காக ஏராளனமான நாய்களை பார்த்தோம். வெளிநாடுகளில் இருந்து கூட நாய்களை, இறக்குமதி செய்தோம். அவைகளுக்காக தனி ஏசி கேரவனையும் ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது.
கொரோனா ஊரடங்கில் நாங்கள் நிறைய பேசினோம். அப்போது அவர் என்னிடம் தன்னுடைய ரி என்ட்ரி வேற லெவலில் இருக்க வேண்டும் என்றார். இந்தப்படத்தில் அவருக்கு 7 முதல் 8 தோற்றங்கள் இருக்கின்றன. வடிவேலு இந்தப்படத்தில் இரண்டு பாடல்களை பாடியிருக்கிறார். ஒரு சீன் செய்வதற்கு முன்னால், கேரவனுக்குள்ளே அந்த சீன் ஒர்க் அவுட் ஆகுதான்னு பலரிடம் கேட்டுபார்ப்பார். மக்கள் காமெடிகளை பார்த்து பழைய காமெடிகள் மாதிரி இல்லையேன்னு சொல்லிடக்கூடாதுன்னு என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். அவரது சிம்மாசனம் இன்னும் காலியாக உள்ளது, அவர் மட்டுமே அதில் அமர முடியும். எனவே, அவர் இன்னும் அதற்கு தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்த விரும்பினார்.
அப்பத்தா பாட்டுக்கு பிரபுதேவா நடனம் அமைக்க சொல்லி கேட்டோம். அவர் கண்டிப்பா பண்றேன், அண்ணன் படத்துக்கு பண்ணாம வேற யாரு படத்துக்கு பண்ணபோறேன் சொல்லி பண்ணார்.” என்றார்.
தகவல் உதவி: டைம்ஸ் ஆஃப் இந்தியா