FIFA World Cup 2022: 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் யாருமே எதிர்பார்க்காத பிரான்ஸ் அணி தன்னைவிட பலமான அணிகளை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனது. இந்த முறையும் இந்த அணி சாம்பியன் பட்டத்தினை வெல்லுமான என எதிர்பார்க்கப்படுகிறது. 


2018-ஆம் நடைபெற்ற 21-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டியானது, அந்த ஆண்டின் ஜூன் மாதம் 14-ஆம் தேதி தொடங்கி அதே ஆண்டில் ஜூலை 15-ஆம் தேதிவரை நடைபெற்றது. 2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மொத்தம் 32 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. மொத்தம் 64 போட்டிகள் நடத்தப்பட்டன. 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த போட்டியானது ஐரோப்பாவில் நடத்தப்பட்டது. மொத்தம் 21 முறை நடந்துள்ள இந்த போட்டியானது ஐரோப்பாவில் மட்டும் 11 முறை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முறை நடைபெறவுள்ள உலககோப்பை கால்பந்து போட்டியானது கத்தாரில் தொடங்கவுள்ளது. 


பல்வேறு அணிகள் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களம் இறங்கினாலும், நடப்புச் சாம்பியனாக களம் இறங்கும் பிரான்ஸ் அணியானது ஒரு தனி புத்துணர்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் களம் இறங்கவுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த உலககோப்பையில் பிரான்ஸ் அணியானது கோப்பையை வென்று உலக சாம்பியன் ஆனது என்பது பிரான்ஸ் அணிக்கு ஒரு அசாத்திய நம்பிக்கையினை அளித்துள்ளது. 






கடந்த 2018ல் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியனாக ஜெர்மனி அணி களம் இறங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனி அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. அதன் பின்னர் கோப்பையை வெல்லும் அணிகளாக இருந்த போர்ச்சுக்கல் மற்றும் அர்ஜெண்டினா, கொலம்பியா மற்றும் ஸ்பெயின் அணிகள் ரவுண்டு 16 சுற்றில் வெளியேறின. 


அதனைத் தொடர்ந்து பலமான அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரோஷிய அணிகள் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷிய அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலக சாம்பியன் ஆனது. இப்படி பெரிய பெரிய ஜாம்பவான்களை வீழ்த்தி உலக சாம்பியன் ஆன பிரான்ஸ் அணி இந்தமுறை கோப்பையை வெல்ல முழு முனைப்புடன் களம் இறங்கியுள்ளது. ஆனால் அணியின் வீரர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அணிக்கு அது பின்னடைவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.