அண்மைக் காலமாகப் பரவி வரும் தக்காளி காய்ச்சல் அறிகுறிகள், சிகிச்சை என்னென்ன? காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி என்று அரசு மருத்துவர் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா கூறியதாவது:
''அண்டை மாநிலமான கேரளாவில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு "தக்காளிக் காய்ச்சல்" என்ற பெயரில் விநோதக் காய்ச்சல் பரவி வருவதாக அண்மையில் செய்திகள் பரவின. சுமார் 100 குழந்தைகளுக்கு இந்த நோயின் அறிகுறிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தத் தொற்றுக்குள்ளான குழந்தைகளுக்கு வாய், கை மற்றும் கால் பாதங்களில் கொப்புளங்கள் தோன்றும். இந்தக் கொப்புளங்கள் பார்ப்பதற்கு "தக்காளி" போலத் தோற்றமளிப்பதால் இந்தக் காய்ச்சலுக்கு தக்காளிக் காய்ச்சல் என்று பெயர் வந்தது. மற்றபடி நாம் உண்ணும் தக்காளிக்கும் இந்த காய்ச்சலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
தக்காளிக் காய்ச்சல் என்று பேச்சு வழக்கில் அழைக்கப்படும் இந்த நோய்க்கு மருத்துவ உலகத்தில் HFMD - HAND FOOT MOUTH DISEASE என்று பெயர் இந்த நோய் எண்டெரோ வைரஸ் குடும்பத்தின் வைரஸ்களால் ஏற்படுகிறது. தற்போது நாம் சந்திக்கும் இந்த தக்காளிக் காய்ச்சலை காக்சாக்கி ஏ 16 (COXSACKIE A 16 VIRUS) என்னும் வைரஸ் தோற்றுவிக்கிறது. இவ்வகை வைரஸ் தொற்று குழந்தைகளிடையே மிகவும் மிதமான வீரியத்துடன் வெளிப்படும்.
என்னென்ன அறிகுறிகள்?
* இந்த வைரஸ் தாக்கிய குழந்தைகளுக்கு வாய், கை மற்றும் பாதங்களில் கொப்புளங்கள் தோன்றலாம்.
* காய்ச்சல், உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் இருக்கும்.
* நீரிழப்பு, பசியின்மை ஆகியவையும் ஏற்படலாம்.
* இந்த நோய் இருமுவது, தும்முவது மற்றும் கொப்புளங்களில் இருந்து வரும் திரவம் வழியாக, நேரடியாக மற்றொருவருக்குப் பரவும்.
சிகிச்சை என்ன?
* இந்த நோய்க்கு நேரடியாக வைரஸ் கொல்லி மருந்துகள் இதுவரை இல்லை.
* ஆயினும் இந்தத் தொற்றுக்குள்ளான குழந்தைகளுக்கு காய்ச்சல், வாய்ப்புண் மற்றும் நீர் இழப்பிற்கு உகந்த சிகிச்சையை வழங்க முடியும்.
* இந்த நோயின் அறிகுறிகள் தோன்றினால் உடனே தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் விரைவில் குணமடைய முடியும்.
* உணவு மற்றும் திரவங்கள் உட்கொள்ளாத நிலையில் குழந்தையை சில நாட்கள் வீட்டிலேயே எந்த மருத்துவ உதவியும் கிடைக்காமல் வைத்திருப்பது குழந்தையின் உயிருக்கு ஊறு விளைவிக்கக் கூடும். இத்தகைய குழந்தைகளுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம்.
* அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள் இந்தத் தொற்றின் தாக்கத்தில் இருந்து குழந்தைகள் மீண்டு விடுவர்.
* இவ்வகை வைரஸ் தொற்றால் உயிரிழப்பு அபாயம் இல்லை.
* எனவே பெற்றோர்கள் இதுகுறித்து வீண் பீதி அடைய வேண்டிய அவசியம் இல்லை.
எந்த மாதிரியான உணவை அளிக்கலாம்?
* இந்த தொற்றுக்குள்ளான குழந்தைகளுக்கு வாயில் புண் இருப்பதால் உணவு சரிவர உண்ண மாட்டார்கள். எனவே இயன்றவரை திரவமாக உணவை வழங்க வேண்டும்.
* கஞ்சி, பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை வழங்கலாம்.
* வாய் வழியாக உட்கொள்ள இயலாத நிலை இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்த நாளம் வழியாக திரவங்களை வழங்கலாம்.
தடுப்பது எப்படி?
* தக்காளிக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான குழந்தைகளைத் தொற்றின் அறிகுறிகள் குணமாகும்வரை தனிமையில் வைத்திருப்பது அவசியம்.
* கைகளை அடிக்கடி சோப் கொண்டு கழுவுதல்.
* தன் சுத்தம் பேணுதல்.
* நோய் அறிகுறிகள் வெளிப்படுத்தும் குழந்தைகளின் டயப்பர்களை முறைப்படி அப்புறப்படுத்துதல்.
* இந்நோய் தாக்குண்ட குழந்தைகளிடம் மற்ற குழந்தைகள் நேரடியாக தொடர்பில் இல்லாதிருத்தல்.
போன்றவற்றைப் பேணுவதன் மூலம் இந்த நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
தக்காளிக் காய்ச்சல் என்ற பெயரில் பரவும் இந்த நோய் குறித்து பெரிய அச்சம் பொதுமக்களிடையே தேவையில்லை. எச்சரிக்கை உணர்வுடன் இருந்தால் போதுமானது''.
இவ்வாறு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.